Published : 17 Jan 2019 06:00 PM
Last Updated : 17 Jan 2019 06:00 PM

சபரிமலையை அடுத்து அகஸ்தியர்கூடம்: தடையைத் தகர்த்து மலையேறினார் முதல் பெண் தான்யா சனல்

கேரளாவில் நீண்டகாலமாகத் தடை விதிக்கப்பட்டிருந்த அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதியளித்ததை அடுத்து, தான்யா சனல் என்ற 38 வயது பெண், மலையேறியுள்ளார்.

 

கேரள மாநிலம், திருவனந்தபுரம், நெய்யாறு வனச்சரணாலயத்தில் அமைந்துள்ளது அகஸ்தியர்கூடம். அகத்திய முனிவர் இங்கு தங்கி இருந்ததாக இங்குள்ள ஆதிவாசி மக்களான கனி பழங்குடியினர் நம்புகின்றனர். இந்த மலை கடல்மட்டத்தில் இருந்து 1,868 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

 

அகஸ்தியர்கூட மலையில், அகத்திய முனிவருக்குத் தனியாகக் கோயில் இருந்தாலும் இங்கு வழிபாடு செய்வதற்கு பெண்களுக்கு காலங்காலமாக அனுமதியில்லை. இங்குள்ள கனி பழங்குடியைச் சேர்ந்த பெண்கள் கூட சிலை அருகே செல்வது கிடையாது. இந்த நடைமுறையைக் கனி பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில், இந்த மலைக்குப் பாலினப் பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் நீண்ட ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

எனினும் அனுமதி கிடைக்காத நிலையில், மலப்புரத்தைச் சேர்ந்த ‘விங்ஸ்’ என்ற பெண்கள் நல அமைப்பும், கோழிக்கோட்டைச் சேர்ந்த ‘அன்வேஷ்’ என்ற மகளிர் நல அமைப்பும் கேரள உயர் நீதிமன்றத்தில் தடையை நீக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இதை விசாரித்த  நீதிமன்றம், அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள் செல்ல அனுமதியளித்தது.

 

இதையடுத்து கேரள வனத்துறை அகஸ்தியர்கூட மலைக்கு டிரக்கிங் செல்வோருக்கான ஆன்-லைன் முன்பதிவை ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 மணிநேரத்தில் அனைத்தும் முடிந்தது. கடந்த 14-ம் தேதி அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள், ஆண்கள் அனைவரும் மலையேற்றத்தைத் தொடங்கினர். ஏறக்குறைய 47 நாட்கள்  அகஸ்தியர்கூட மலைக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

 

மேலும், இந்த மலைக்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நலமாக இல்லாதவர்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு காரணங்களாக அனுமதி மறுத்தனர்.

 

இந்நிலையில் கேரளத்தின் இரண்டாவது உயரமான உச்சியான அகஸ்தியர்கூட மலைக்கு முதன்முதலாக தான்யா சனல் என்னும் 38 வயதுப் பெண் சென்றுள்ளார். 2012-ம் ஆண்டு இந்திய தகவல் துறை (ஐஐஎஸ்) அதிகாரியான தான்யா, திருவனந்தபுரத்தில் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

 

மலை ஏறியது தொடர்பாக தான்யா பேசும்போது, ''நான் உடல்ரீதியில் ஃபிட்டாக இருக்கிறேன். தினந்தோறும் ஒரு மணி நேரம் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன். பெண்கள், ஆண்கள் இருவரும் பலத்துடன் இருக்கவேண்டும். மலையேற்றத்தில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

 

எனக்கு மலையேற்றத்தில்தான் ஆர்வமே தவிர, எந்தக் கோயிலுக்கும் போகவில்லை. உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தவில்லை'' என்றார்.

 

இதற்கிடையே அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அங்குள்ள ஆதிவாசி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x