

ஒன்பது மாநிலங்களின் 27 தொல்லியல் சின்னங்களுக்கும் நுழைவுக் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்றாக தமிழகத்தின் ஐந்து பழம்பெரும் வரலாற்றுச் சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் தற்போது 116 தொல்லியல் சின்னங்களைப் பார்வையிட இந்திய தொல்பொருள் ஆய்வகம் (ஏஎஸ்ஐ) சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல்வேறு நூற்றாண்டுகளில் அமைந்தவற்றில் பலவற்றுக்கு இலவசமாகப் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் மேலும் 27 தொல்லியல் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு இதழில் ஒரு அறிவிக்கையை ஏஎஸ்ஐயை நிர்வாகிக்கும் மத்திய கலாச்சாரத்துறை ஜனவரி 4-ம் தேதி வெளியிட்டுள்ளது.
இதன் மீது கருத்து கூற விரும்பும் துறை நிபுணர்கள், தொல்லியல் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களுக்காக அடுத்த 45 நாட்களுக்கு தம் ஆலோசனைகளை ஏஎஸ்ஐக்கு அனுப்ப கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு அது உத்தரவாக ஏஎஸ்ஐ அமலாக்கும். இதில், தமிழகத்தின் ஐந்து தொல்லியல் சின்னங்கள் புதிதாக இடம் பெற்றுள்ளன. இவை, கன்னியாகுமரியில் உள்ள வட்டக்கோட்டி கோட்டை, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, காஞ்சிபுரத்தின் புலிக்குகை கோயில் மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள இரு தொல்லியல் சின்னங்கள் ஆகியன ஆகும்.
மற்ற எட்டு மாநிலங்களில் மிக அதிகமான தொல்லியல் சின்னங்களாக மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் எட்டுக்கும் அதிகமாக இடம் பெற்றுள்ளன.
டெல்லியில் ஹோஸ்காஸ் சின்னங்கள், குஜராத்தின் காந்தி நகரில் அதாலாஜ் மற்றும் ருதாபாய் ஸ்டெப்வேலி, கோவாவில் மேல்கோட்டை மற்றும் அக்குவாதா, கேரளாவில் பாலக்காடு மற்றும் கண்ணூர் கோட்டைகள் ஆகியவை அமைந்துள்ளன.
ராஜஸ்தானில் ஆறு சின்னங்களும், உத்தரப் பிரதேசத்தில் நான்கும் நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட உள்ள பட்டியலில் உள்ளன. இவை அனைத்திற்கும் ஏஎஸ் ஐ சார்பில் ரூ.35-ம், வெளிநாட்டவருக்கு ரூ.550-ம் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
இந்தத் தொகையை அந்த தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பொருட்டு வசூலிப்பதாக ஏஎஸ்ஐ ஏற்கெனவே கூறியுள்ளது. இதன்மூலம், அந்த தொல்லியல் சின்னங்களில் சமூக விரோதிகளின் நடவடிக்கையும், சேதப்படுத்தப்படுவதும் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏழு
தற்போது தமிழகத்தில் மொத்தம் ஏழு தொல்லியல் சின்னங்களுக்கு மட்டுமே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை, மாமல்லபுரச் சிற்பங்கள் மற்றும் கோயில்கள், விழுப்புரத்தின் செஞ்சிக்கோட்டை, திண்டுக்கல்லின் கோட்டை, புதுக்கோட்டையில் நான்கு சின்னங்களாக மூவர் கோயில், சித்தன்ன வாசல் ஓவியங்கள், ஜெயின் கோயில், திருமயம் கோட்டை ஆகியவை ஆகும்.
இவற்றில் மாமல்லபுரம் மட்டுமே 'ஏ' எனும் பிரிவின் உயர்வகை நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.