கர்நாடக முதல்வர் குமாரசாமியை விமர்சித்த காங். எம்எல்ஏ சோமசேகர் மன்னிப்பு கோரினார்

கர்நாடக முதல்வர் குமாரசாமியை விமர்சித்த காங். எம்எல்ஏ சோமசேகர் மன்னிப்பு கோரினார்
Updated on
1 min read

கர்நாடக முதல்வர் குமாரசாமியை விமர்சித்த காங்கிரஸ் எம்எல்ஏ சோமசேகர் அக்கட்சித் தலைவர்களின் உத்தரவின்படி மன்னிப்பு கோரினார்.

கர்நாடகாவின் யஷ்வந்த்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான சோமசேகர் அண்மையில், “குமாரசாமியின் ஆட்சியில் மாநிலத்தில் எந்த வளர்ச்சித் திட்டமும் நடைபெறவில்லை. சித்தராமையாவின் முந்தைய ஆட்சியில் ஏராளமான மேம்பாட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. என்னைப் பொறுத்தவரை சித்தராமையா தான் முதல்வர்” என்று கூறியிருந்தார். இதை ஆதரித்து அமைச்சர் புட்டரங்க ஷெட்டி, எம்எல்ஏ சுதாகர் உள்ளிட்டோர் பேசினர்.

இதனால் கோபமடைந்த முதல்வர் குமாரசாமி, “காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து இதுபோல் பேசி வந்தால் முதல்வர் பதவியில் இருந்து விலகி விடுவேன். இதனால் எங்களை விட காங்கிரஸுக்கு தான் அதிக இழப்பு ஏற்படும்” என பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து சோமசேகர் மன்னிப்பு கேட்கவேண்டும் என காங்கிரஸ் மேலிடத் தலைவர் கே.சி. வேணுகோபால், கட்சியின் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் வலியுறுத்தினர்.

இதையடுத்து எம்எல்ஏ சோமசேகர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “காங்கிரஸ் - மஜத கூட்டணியை சிதைக்கும் நோக்கில் நான் பேசவில்லை. எனது பேச்சால் முதல்வர் குமாரசாமியின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். இந்த கூட்டணி அரசுக்கும், குமாரசாமிக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல அமைச்சர் புட்டரங்க ஷெட்டி, எம்எல்ஏ சுதாகர் உள்ளிட்டோரும் மன்னிப்பு கோரியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in