சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு

சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு
Updated on
1 min read

சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் நாளை நடைபெறுகிறது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும்பொருட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

கோயிலுக்குள் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததால், கோயிலின் புனிதம், பாரம்பரியம் கெட்டுவிட்டதாக கூறி தந்திரி ராஜீவரரூ சுத்தி பூஜை நடத்தினார். பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுத்தி பூஜை நடத்தப்பட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

சபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான  பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்தின. முழு அடைப்பு போராட்டத்தில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

இதனால் மண்டல பூஜை தொடங்கி மகர விளக்கு வழிபாடு வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.

இந்தநிலையில் மகர விளக்கு பூஜையின் இறுதிநாள் வழிபாடான மகர ஜோதி தரிசனம் நாளை நடைபெறுகிறது. இதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்து வரப்படும் திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

இந்த திருவாபரண ஊர்வலம் பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து நேற்று சபரிமலை நோக்கி புறப்பட்டது. திருவாபரண ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதைகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்களின் வரவேற்புடன் நாளை மாலை திருவாபரண ஊர்வலம் சபரிமலை சன்னிதானத்தை சென்றடையும். அதன் பிறகு 18-ம் படி வழியாக திருவாபரணம் கொண்டு செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். பின்னர் மகர ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டு மகர விளக்கு சீசன் முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in