எனக்கு கிடைத்த அங்கீகாரமே பத்மபூஷண்: விஞ்ஞானி நம்பி நாராயணன் நெகிழ்ச்சி

எனக்கு கிடைத்த அங்கீகாரமே பத்மபூஷண்: விஞ்ஞானி நம்பி நாராயணன் நெகிழ்ச்சி
Updated on
1 min read

"இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் நான் ஆற்றிய பங்களிப் புக்கு இறுதியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது'' என பத்மபூஷண் விருது பெற்ற இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் (77) தெரிவித்தார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி யாளரிடம் அவர் கூறியதாவது:

வெளிநாடுகளுக்கு ரகசிய தகவல் அளித்ததாக என் மீது குற்றம்சாட்டியதன் காரணமாக, எனது பெயர் நாடு முழுவதும் பிரபலம் அடைந்தது. தற்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் எனது பங்களிப்புக்கு இறுதியாக அங்கீகாரம் கிடைத் துள்ளது. எனக்கு கிடைக்கப்பெற்ற பத்மபூஷண் விருதினை எனது பணிக்கு கிடைத்த அங்கீகார மாகவே கருதுகிறேன் என அவர் கூறினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் நம்பி நாராயணன். ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில் நுட்பங்கள், கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பம் ஆகிய வற்றின் உருவாக்கத்தில் அவர் முக்கிய பங்காற்றி வந்தார்.

இதனிடையே, இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான சில ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக கூறி, விஞ்ஞானி நம்பி நாராயணனை கேரள போலீஸார் கடந்த 1994-ம் ஆண்டு கைது செய்தனர். அவர் மீது குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சில மாதங்களுக்கு பிறகு, இந்த வழக்கானது சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில், விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், தாம் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in