

காஷ்மீர் பள்ளத்தாக்கின் அடர்ந்த வனப்பகுதிகளில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இன்று அதிகாலையிலிருந்தே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்த விவரம்:
''காஷ்மீரின் பட்காம் மாவட்டம் உயர்ந்த மலைகளும் மழைக்காடுகளும் அடர்ந்த பகுதியாகும். இதன் பின்புறம் சர்வதேச எல்லைப் பகுதி அமைந்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் அவ்வழியாக அடர்ந்து வனப்பகுதிக்குள் புகுந்துகொண்டு துப்பாக்கியால் பாதுகாப்புப் படையினரின் பாசறைகளை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு வருகிறார்கள்.
இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அப்பகுதிகளில் ஏராளமாக களம் இறக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினரும் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையிலிருந்தே அங்கு கடும் துப்பாக்கிச் சண்டை தொடங்கியுள்ளது. இச்சண்டை மேலும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் ஏதும் அறியமுடியவில்லை''.
இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதிகளில் நாளுக்கு நாள் பாகிஸ்தானியர்களின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகாலமாக இல்லாத அளவுக்கு 2018-ம் ஆண்டில் மட்டும் 257 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.