புள்ளியியல் துறை உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா; மேலும் ஒரு நிறுவனம் மரணித்தது: ப.சிதம்பரம் தாக்கு

புள்ளியியல் துறை உறுப்பினர்கள் திடீர் ராஜினாமா; மேலும் ஒரு நிறுவனம் மரணித்தது: ப.சிதம்பரம் தாக்கு
Updated on
1 min read

தேசிய புள்ளியியல்துறை ஆணையத்தின் இரு உறுப்பினர்கள், திடீரென ராஜினாமா செய்துள்ளதை சுட்டிக்காட்டி, விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "மத்திய அரசின் அலட்சியமான போக்கால், மேலும் ஒரு அரசு நிறுவனம் மரணித்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினர்களாக இருந்த பி.சி.மோகனன், ஜே.வி. மீனாக்ஷி ஷி ஆகியோர் திங்கள்கிழமை திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதில் பி.சி. மோகனன் ஆணையத்தின் செயல் தலைவராகவும், மீனாக்ஷி டெல்லியில் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸில் பேராசிரியராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் நாட்டின் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் மத்திய அரசுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திடீரென ராஜினாமா செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது தேர்தல் நேரம் நெருங்கி வருவதால், நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரம், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் வேலையின்மை குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டால், அது சிக்கலை ஏற்படுத்தும். ஆதலால், வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை வெளியிடுவதில் அரசுக்கும், உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளே ராஜினாமாவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதில் ராஜினாமா செய்த உறுப்பினர்கள் மீனாக்‌ஷி மோகனன் ஆகியோரின் பதவிக்காலம் 2020-ம் ஆண்டுவரை இருக்கும் நிலையில் பதவி விலகியுள்ளனர்.

ஆணையத்தின் தலைவர் மோகனன் தனியார் செய்திசேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "ஆணையம் என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணிகளைச் செய்யவில்லை என்பதால், திறனற்ற வகையில் இருப்பதாகக் கருதினேன். சமீபகாலமாக நாங்கள் ஓரம்கட்டப்படுகிறோம் என நினைத்தோம். நாட்டின் அனைத்துப் புள்ளிவிவரங்களுக்கும் உரிய பொறுப்பாளர்கள், மக்களுக்குத் தகவலை அளிக்க வேண்டியவர்கள் நாங்கள்தான். ஆனால் அந்தப் பணி சரியாகச் செய்ய முடியவில்லை என நினைத்தோம். அதனால் பதவி விலகினேன் " எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் இரு உறுப்பினர்கள் பதவி விலகியதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ''மத்திய அரசின் தீங்கிழைக்கும் வகையிலான அலட்சியத்தால் 29-ம் தேதி மேலும் ஒரு அமைப்பு மரணித்துள்ளது. தேசிய புள்ளியியல் ஆணையம் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவோம். திருத்தப்படாத நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள், வேலைவாய்ப்பு தகவல்கள் ஆகியவற்றை வெளியிடப் போராடிய இரு உறுப்பினர்களுக்கும் நன்றி. தேசிய புள்ளியியல் ஆணையம் மீண்டும் உயிர்பெறும்வரை அமைதியாக இருக்கட்டும்" என ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

தேசிய புள்ளியியல் ஆணையத்தின் 2 உறுப்பினர்கள் விலகியதைத் தொடர்ந்து தலைமைப் புள்ளியியல் வல்லுநர் பிரவின் சிறீவஸ்தவா, நிதிஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in