Published : 21 Jan 2019 08:02 PM
Last Updated : 21 Jan 2019 08:02 PM

சபரிமலை போராட்டம்: கேரளாவில் நடந்த பிரமாண்ட ஐயப்ப பக்த சங்கமம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடந்த போராட்டத்தின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று பிரமாண்ட ஐயப்ப பக்த சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. இந்து துறவிகள், மடாதிபதிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாகக் கேரள மாநிலம் முழுவதும் பாஜகவினர், இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியே தீருவோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக அரசு, 50வயதுக்குட்பட்ட பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்தது. பிந்து, கனகதுர்கா ஆகிய இரு 50வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலையில் முதல் முறையாகத் தரிசனம் செய்து திரும்பினார்கள். இதை எதிர்த்து பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.

கடும் சர்ச்சைகள், போராட்டங்களுடன், சபரிமலையில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு வழிபாடு நேற்றுடன் முடிவடைந்தது. ஹரிவாரசனம் பாடப்பட்ட ஐயப்பன் கோயில் நடை, அடைக்கப்பட்டது. அடுத்து வரும் பிப்ரவரி 13-ம் தேதி மாதப்பிறப்பையொட்டி திறக்கப்படும்.

இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு முதல் தொடர்ந்து ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தி வந்த ஐயப்ப கர்ம சமதி சார்பில் நேற்று ஐயப்ப பக்த சங்கமம் என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருவனந்தபுரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்து மத துறவிகள், மடாதிபதிகள், இந்து மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஐயப்ப குருசாமிகள் கலந்து கொண்டனர்.  பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மாதா அமிர்தானந்த மயி, சபரிமலையில் நடந்த சம்பவங்கள் வேதனை அளிப்பதாக கூறினார். சபரிமலையின் சம்பிரதாயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x