

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 பெண்கள் வழிபட்டதற்கு கண்ட னம் தெரிவித்து கேரளாவில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடை பெற்றது. இதில் வன்முறை வெடித்து ஒருவர் உயிரிழந்தார். 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட னர். 100 அரசு பேருந்துகள் கல் வீசி உடைக்கப்பட்டன.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கு மாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கூறியது. இத்தீர்ப்பை அமல் படுத்துவதில் கேரள இடதுசாரி அரசு முனைப்பு காட்டிய நிலையில், சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனால் சபரிமலை நடை திறக்கப்படும் போதெல்லாம் பிரச்சினை வெடித் தது. இதனால் நடை திறக்கும் காலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த கனக துர்கா (44), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து அம்மினி (40) ஆகி யோர் நேற்று முன்தினம் அதிகாலை சபரிமலை ஐயப்பனை தரிச னம் செய்தனர். இளவயது பெண் கள் சபரிமலைக்கு சென்றதைத் தொடர்ந்து கேரளாவில் ஆங் காங்கே போராட்டம் வெடித் தது.
சபரிமலை கர்ம சமிதி அமைப் பின் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி நேற்று ‘கருப்பு தினத்தை’ அறிவித்து கூட்டங்கள் நடத்தி யது. இதனால் கேரளா முழுவ தும் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பந்தளம் பகுதியில் சபரி மலை கர்ம சமிதி அமைப்பின் சார்பில் நேற்று முன்தினம் இரவு பேரணி நடைபெற்றது அப் போது அங்குள்ள மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது கல் வீசப் பட்டதாகக் கூறப்படுகிறது. இடதுசாரிகள், இந்து அமைப்பினர் இடையே கல்வீச்சு தாக்குதல்கள் நடந்தன. இதில் குரம்பாலகுற்றி பகுதியை சேர்ந்த சந்திரன் உண்ணித்தான்(55) என்பவர் படு காயம் அடைந்தார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக பந்தளத்தை சேர்ந்த கண்ணன், அஜூ ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கேரளாவின் வயநாடு பகுதியை சேர்ந்த பாத்திமா, திருவனந்தபுரத் தில் உள்ள புற்றுநோய் மையத் துக்கு சிகிச்சைக்காக ரயிலில் நேற்று வந்தார். தம்பானூர் ரயில் நிலையத்தில் இறங்கி, நடைமேடை யில் செல்லும்போது மயங்கி விழுந் தார். போராட்டம் காரணமாக ஆம்பு லன்ஸ் வர தாமதமானது. ஆம்பு லன்ஸ் வருவதற்குள் பாத்திமா உயிரிழந்தார்.
கேரளா முழுவதும் பதற்றம்
கேரளாவில் பல்வேறு பகுதிகளி லும் நேற்று முழுவதும் போராட்டங் கள் நடைபெற்றன. பாலக்காடு பகுதியில் போராட்டத்தை அடக்க போலீஸார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். திரூர் பகுதியில் திறந்திருந்த கடைக ளுக்கு தீவைக்கப்பட்டன. சாலை யில் ஆங்காங்கே டயர்களை கொளுத்தினர். குயிலாண்டி பகுதி யில் காவல் ஆய்வாளரின் வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப் பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். பாலக் காடு வெண்ணக்கரை பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் நூலகத்தை போராட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்தினர். பேராம்பரா, குயி லாண்டி பகுதிகளில் அரசு பேருந்து கள் கல் வீசி தாக்கப்பட்டன.
மலப்புரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. கண்ணூர் ரயில் நிலையம் அருகே ஒரு ஹோட்டல் கொளுத்தப்பட்டது. கடையடைப் புக்கு ஆதரவு கொடுக்காத கேரள வணிகர் சங்கத் தலைவர் நஸ்ருதீன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
500-க்கும் மேற்பட்டோர் கைது
கேரளா முழுவதும் போராட் டங்களில் ஈடுபட்டதாக 266 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக 334 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக வலைதளங்கள் மூலம் கலவரத்தை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச் சரித்துள்ளனர். கலவரத்தில் ஈடுபடு பவர்களை புகைப்படங்கள், வீடி யோக்கள் மூலம் அடையாளம் கண்டு கைது செய்யுமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.
செய்தியாளர்கள் மீது தாக்குதல்
சபரிமலை கர்ம சமிதியின் ஊர் வலம் பல இடங்களில் போராட்ட மாக வெடித்தது. சில இடங்களில் பாஜக, இடதுசாரி கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. திருவ னந்தபுரம், கொல்லம், கோழிக் கோடு பகுதிகளில் செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இது குறித்து கேரள டிஜிபி லோக்நாத் பெகரா கூறியபோது, ‘‘செய்தியாளர் களை தாக்கியது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு நடந்த போராட்டத்தில்தான் அதிக அளவில் செய்தியாளர்கள் தாக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரிக் கப்படும்’’ என்று தெரிவித்தார்.
கேரளாவில் கடந்த 2 நாட்களாக நடந்த கலவரத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள் ளது. 100 அரசு பேருந்துகள் தாக்கப் பட்டதால் போக்குவரத்துக் கழகத் துக்கு ரூ.3.35 கோடி இழப்பு ஏற் பட்டுள்ளதாக கேரள அரசு போக்கு வரத்துக் கழக நிர்வாக இயக்குநர் டோமின் தச்சங்கரி கூறினார்.
முதல்வர் பேட்டி
கேரள முதல்வர் பினராயி விஜ யன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சபரிமலை தந்திரி நடையை அடைத்துவிட்டு பரிகார பூஜை செய்துள்ளார். அவருக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறு பாடு இருக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய கடமை அவருக்கும் உண்டு. இது பாஜக நடத்தும் 5-வது பந்த். சபரிமலையில் சங்பரிவார் செய்தது மக்கள் மனதில் பதிந்துள் ளது. இதற்கு முன்னரே வந்த 2 பெண்களும் மீண்டும் செல்ல காவல் துறை உதவியை நாடினர். அவர்கள் ஒன்றும் ஹெலிகாப்டரில் செல்லவில்லை. பக்தர்கள் செல்லும் பாதையில்தான் சென்றனர். இந்த கலவரத்தில் 31 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
முழு அடைப்பு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக உடனடியாக அறிக்கை அளிக்கு மாறு முதல்வர் பினராயி விஜய னிடம் ஆளுநர் பி.சதாசிவம் கேட்டுள்ளார்.