

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கூறியுள்ளார்.
உத்தரகாண்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் ராவத், "பாஜகவினர் எப்போதுமே மற்றவர்களின் மாண்பைக் குலைப்பார்கள். மற்றவர்கள் மாண்பைச் சிதைப்பவர்கள் எப்படி ராமரின் பக்தராக இருக்க இயலும். நாங்கள் தான் அரசியல் சாசனத்தை மதிக்கத் தெரிந்தவர்கள். நாங்களே அடுத்தவர் மாண்பினை மதிப்பவர்கள். எனவே, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் தான் ராமர் கோயில் கட்டப்படும்" என்றார்.
முன்னதாக, ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி பேசும்போது, "2025-ல் ராமர் கோயிலைக் கட்டும் பணியைத் தொடங்கும்போது நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். 1952-ல் சோம்நாத் கோயில் கட்டப்பட்ட பின்னரே தேசத்தின் வளர்ச்சி அதிகரித்தது. இப்போது ராமர் கோயிலைக் கட்டினால் அதே வேகத்தில் தேசம் வளர்ச்சி காணும். ராமர் கோயிலை மட்டும் கட்டுங்கள் நாட்டுக்கு அடுத்த 150 ஆண்டுகளுக்குத் தேவையான முதல் கிடைக்கும்" எனக் கூறியிருந்தார்.
ராமர் கோயில் கட்ட நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலேயே அவர் 2025-ல் ராமர் கோயில் கட்டப்படும் என பேசியதாக சர்ச்சைகள் எழுந்தன.
பாஜகவை ஆர்.எஸ்.எஸ். அமைப்பே கிண்டல் செய்துவிட்டது என்று தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக பையாஜி ஜோஷி விளக்கமளித்தபோது, "2025-க்குள் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இப்போது வேலை ஆரம்பித்தால் 2025-க்குள் பணிகள் நிறைவு பெற்றுவிடும். இதைத்தான் நான் கூறினேன்" என்றார்.