

‘பப்ஜி’ (பிளேயர் அன்நோன் பேட்டில் கிரவுண்ட்) வீடியோ கேம் விளையாட்டை பள்ளிகளில் குஜராத் அரசு தடை செய்துள்ளது.
மொபைல் போன்களில் ‘பப்ஜி’ எனப்படும் வீடியோ கேம் விளையாட்டு மாணவர்களிடம் பரவி வருகிறது. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி அந்த விளையாட்டுக்கு மாணவர்கள் அடிமையாகி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்களில் ‘பப்ஜி’ விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் ‘பப்ஜி’ விளையாட்டுக்கு குஜராத் மாநில அரசு தடை விதித்துள்ளது.
பள்ளிகளில் ‘பப்ஜி’ விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு குஜராத் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ‘பப்ஜி’ விளையாட்டுக்கு மாணவர்கள் அடிமையாவதாகவும் இதனால் அவர்களது கல்வி கடுமையாக பாதிக்கப்படுவதால் அந்த விளையாட்டை தடை செய்வது அவசியமாகிறது என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ‘பப்ஜி’ விளையாட்டை தடை செய்ய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் பரிந்துரை செய்துள்ளதாகவும் இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குஜராத் குழந்தைகள் உரிமை கமிஷன் தலைவர் ஜக்ருதி பாண்ட்யா தெரிவித்துள்ளார்.