

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமான உத்தரவாதம் அளிக் கும் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்த விவசாயிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளது. வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு ராகுல் காந்தி வழங்கினார். இந் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளது. அதன்படி, வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் குறைந்த பட்ச வருமானம் கிடைக்கும். ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இதுபோன்ற திட்டம் உலகி லேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். இதுவரை உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படவில்லை. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமல்படுத்துவோம். சத் தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ் தான் உட்பட எல்லா மாநிலங் களிலும் இத்திட்டம் செயல்படுத் தப்படும். இதன் மூலம் இந்தியாவில் பசிக் கொடுமை இருக்காது. ஏழைகளும் இருக்கமாட்டார்கள்.
நிதி இல்லை என்று கூறி விவ சாயக் கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்யவில்லை. சில தொழிலதிபர்களின் நிறுவனங் களுக்கு கடன் தள்ளுபடி செய் வதற்கு மட்டும் பாஜக அரசிடம் போதுமான நிதி உள்ளது. விவசாயக் கடன்களை ரத்து செய்யாத பாஜக அரசு, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு 30 ஆயிரம் கோடியை கொடுக்கிறது. நாட்டில் இரண்டுவிதமான இந்தியர்களை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. ஒருபுறம் அனில் அம்பானி, நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களையும் மறுபுறம் ஏழை விவசாயிகளையும் உருவாக்க முயற்சிக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.