

லண்டனில் நேற்று முன்தினம் இந்திய பத்திரிகையாளர்கள் சங் கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி யில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹேக்கர் சையது சுஜா என்பவர் ‘ஸ்கைப்’ மூலம் பேசினார்.
அப்போது அவர் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என செயல்விளக்கம் அளித்தார்.
மேலும் அவர், “இந்திய எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இவிஎம்-களை வடிவமைத்து தயாரித்த குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். 2014 மக்களவை தேர்தலில் இவிஎம் மோசடி காரணமாக காங்கிரஸ் 201 இடங்களை இழந்தது. இந்த மோசடி பற்றி அறிந்ததால் பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே கொல்லப்பட்டார். எனது குழுவைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டதால் உயிருக்கு பயந்து 2014-ல் இந்தியாவை விட்டு வெளியேறினேன்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபலும் பங்கேற்றார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிர சாத் நேற்று கூறும்போது, “இவிஎம் மோசடி தொடர்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, 2014 தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் அவமதித்து விட்டது” என்றார்.
இதையடுத்து தவறான தகவலை பரப்பிய சையது சுஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல் துறைக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.