Last Updated : 02 Jan, 2019 04:21 PM

 

Published : 02 Jan 2019 04:21 PM
Last Updated : 02 Jan 2019 04:21 PM

அறையில் பதுங்கும் மோடி;அதிமுக எம்.பி.க்கள் பின் ஒளியும் நிர்மலா : ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி கடும் விமர்சனம்

ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் என் கேள்விக்கு பதில் அளிக்கப் பயந்து கொண்டு மோடி அவர் அறையில் பதுங்குகிறார், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்.பி.க்கள் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வெளுத்துவாங்கினார்.

மக்களவை இன்று காலை தொடங்கியதில் இருந்தே அதிமுக, காங்கிரஸ், தெலங்குதேசம் கட்சி ஆகிய எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், பலமுறை ஒத்திவைக்கப்பட்டு பிற்பகலில் கூடியது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் எழுப்பினார்.  ராகுல் காந்தி பேசத் தொடங்கியவுடன் அதிமுக எம்.பி.க்கள் அவரை பேச விடசாமல் அமளியில் ஈடுபட்டு கூச்சலிட்டனர். ஆனால், ஜேட்லி பேசும் போது அமைதி காத்தனர். இதனால், பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக அவையில் செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. ராகுல் காந்தியும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி அவையில்  பேசியதாவது:

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் பேசும்போது அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு தொந்தரவு செய்கிறார்கள்.  பிரதமர் மோடியைப் பாதுகாக்கிறார்கள் என நினைக்கிறேன்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் அவசரமாக 36 விமானங்கள் தேவைப்படுகிறது என்று மத்திய அ ரசு கூறியது. சரி, அந்த 36 விமானங்கள் எங்கே இருக்கிறது. புதிதாகப் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தமே விதிமுறைகளை மீறிப் போடப்பட்டது.

 

ரஃபேல் விவகாரத்தில் 3 கேள்விகள்தான் நாங்கள் கேட்கிறோம். முதலாவது எப்படி ஒப்பந்தம் போடப்பட்டது, 2-வது விலை எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது, மூன்றாவது யாருக்கு ஆதரவானது என்பதுதான். தொடக்கத்தில் இருந்து இந்த 3 கேள்விகளைத்தான் பிரதமரிடம் நாங்கள் கேட்டு வருகிறோம்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், இந்த ஒப்பந்தம் குறித்து ஏதும் தெரியாது என்கிறார். 2-வது விலை ரஃபேல் விமானத்தில் விலை ஏன் ரூ.536 கோடியில் இருந்து ரூ.1600 கோடியாக எப்படி உயர்ந்தது. புதிய விலைக்குப் பாதுகாப்பு துறை அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது உண்மையில்லையா?  மூன்றாவதாக ரபேல் ஒப்பந்தம் பைசாவுக்காகவா அல்லது யாருக்கேனும் ஆதரவு அளிக்கவா?. என்பதுதான்.

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம்(எச்ஏஎல்) பல ஆண்டுகளாக விமானங்களைத் தயாரித்து வருகிறது. ஏராளமான அனுபவம் இருக்கிறது. ஆனால், அனில் அம்பானி தோல்வி அடைந்த, நஷ்டமடைந்த தொழிலதிபர். இந்த ஒப்பந்தம் போடப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்புதான் நிறுவனமே தொடங்கப்பட்டது.  ஏன் பிரதமர் மோடி தனது அன்பு நண்பருக்கு ஒப்பந்தத்தை அதிகமான விலையில் அளிக்கிறார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. கடந்த முறை நான் பேசியபோது அதற்குப் பதில் அளிக்க பிரதமர் மோடி வந்திருந்தார்.

ஒன்றரை மணிநேரம் நேர்காணல் அளித்தபிரதமர் மோடி, ரஃபேர் விவகாரத்தில் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில்லை. என் கேள்விகளுக்கு பதில் அளிக்கத் துணிச்சல் இல்லாமல், அறையில் பதுங்குகிறார் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிமுக எம்.பி.க்கள் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த ஆவணங்கள் தன்னுடைய படுக்கை அறையில் இருப்பதாகக் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது.

இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

 

உடனே எழுந்து பேசிய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 'அது ஆதாரமில்லாத ஆடியோ, அதைப்பற்றி அவையில் பேசக்கூடாது, அது ஜோடிக்கப்பட்டது' என்று கூறினார்.

அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில், 'இந்த ஆடியோ குறித்து உண்மையாக இல்லாத பட்சத்தில் பேச வேண்டாம், இதை அனுமதிக்க முடியாது' என்று தெரிவித்தார்.

அப்போது அவையில் கூச்சலும், குழப்பமும் நீடித்ததால், அவை 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்தார். அவர் பேசுகையில் “ ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்கக் கூடாது என்றோ, நாடாளுமன்றம் விசாரணை நடத்தக்கூடாது என்றோ கூறவில்லை. ரஃபேல் ஒப்பந்தத்தில் உண்மையை அறிய வேண்டும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை. உண்மை வெளிவர வேண்டும்."

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x