Last Updated : 03 Sep, 2014 09:43 AM

 

Published : 03 Sep 2014 09:43 AM
Last Updated : 03 Sep 2014 09:43 AM

உயிருடன் இருந்த நோயாளியை பிணவறைக்கு அனுப்பிய மருத்துவர்கள்: உ.பி. அரசு மருத்துவமனையில் அவலம்

உயிருடன் இருந்த நோயாளியை, இறந்தவர் எனக் கருதி பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். உத்தப்பிரதேச மாநிலம் அலிகர் அரசு மருத்து வமனையில் நடந்துள்ள இந்த அவலம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

டெல்லியில் இருந்து சுமார் நூறு கி.மீ தொலைவில் அலிகர் அருகே, கேர் என்ற இடம் உள்ளது. இதன் சாலை ஓரத்தில் கடந்த 20-ம் தேதி 35 வயதுள்ள ஒருவர் கால்நசுங்கிய நிலையில் சுயநினைவு இன்றி, அடிபட்டு கிடந்திருக்கிறார். இவரை மீட்ட கேர் போலீஸார், அருகிலுள்ள அலிகர் மல்கான் சிங் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்து ள்ளனர்.

இங்கு அடையாளம் தெரியா தவர்களின் சிகிச்சைக்காகவே அமைந்துள்ள எண்-6 வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த வரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் வரவில்லை. இதனால், அவர் இறந்து விட்டதாகக் கருதிய அந்த பிரிவின் மருத்துவர், இரவு 9.00 மணிக்கு அவர் இறந்து விட்டதாக அவரது மருத்துவப் பரிசோதனை சீட்டில் எழுதியதுடன், அவரது ‘உடலை’ பிரேதப்பரிசோதனைக்கும் பரிந்துரைத்து விட்டார். இதன்படி அவரது ‘உடல்’ உடனடியாக பிரேதப்பரிசோதனையின் குளிர்சாதனக் கூடத்தில் மருத்துவமனை பணியாளர்களால் வைக்கப்பட்டு விட்டது.

இந்த வழக்கை பதிவு செய்ய மறுநாள் மதியம் வந்த போலீஸார், குளிர்சாதனக் கூடத்தில் இருந்து உடலை வெளியே எடுத்த போது, அதன் நாடிகள் துடித்துக் கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின் அந்நபரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் உதவி ஆட்சியர் ஹிமான்ஷு கவுதம் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘வாய் பேச முடியாத அவர், கேருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர், குளிர்சாதனைக் கூடத்தில் சுமார் 18 மணி நேரம் இருந்திருக்கிறார். இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சில மூத்த மருத்துவர்கள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.

இந்த சம்பவம் குறித்து மல்கான் சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டிருந்த அலிகர்வாசியான ராம்லால் வர்மா கூறும்போது, “பாதிக்கப்பட்டவரது பெயர் அருண் எனவும், அவர் உறவினர்கள் யாரும் இல்லாத அநாதை எனவும் தெரிய வந்துள்ளது. எங்களால் மருத்துவ மனையின் நாற்ற த்தையே பொறுக்க முடியவில்லை. ஆனால் இவர், மற்ற அழுகிய பிரேதங்களுடன் ஒரு நாள் முழுவதும் எப்படி இருந்தார் எனப் புரியவில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x