

மத்திய பிரதேச மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை சரமாரியாக அடித்து காயப்படுத்திய காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்யவேண்டும் என நகராட்சி ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகராட்சியில் செக்யூரிட்டி ஒருவரை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் சிலர் சேர்ந்துகொண்டு கடுமையாக அடித்து உதைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் முன்னாள் ராணுவ வீரர் என்றும் இவரது பெயர் ஹரீஷ் பட்டேல் என்றும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரியாவ்ரத் சிங்கின் ஆதரவாளர்கள்தான் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜபல்பூர் காவல் கண்காணிப்பாளர் ஏ சிங் தெரிக்கையில், ''முன்னாள் ராணுவ வீரரை ஆறேழு பேர் சேர்ந்துகொண்டு தாக்கியுள்ளனர். அவர்கள் யார்யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இத்தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நகராட்சிப் பணியாளர்கள் திரண்டு வந்து ஜபல்பூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் இக்குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் எதிர்பாராதது என்றாலும் தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்மீது நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் தாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
மாநில பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாதிக்கப்பட்ட ஹரீஷ் பட்டேலை நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அவர் இதுகுறித்து ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், ‘‘மாநிலத்தில் சீர்குலைக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதை எதிர்த்து நாங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், செக்கியூரிட்டி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு ராணுவ வீரரை தாக்கியுள்ளனர். இது எவ்வளவு நாளைக்குத் தொடரும்? ’’என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராகப் பொறுப்பேற்று இன்னும் இரண்டு மாதங்கள் கூட முழுமையடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.