

தொழுநோய் குணப்படுத்தக்கூடியது. எனவே இனியும் அதனைக் காரணம் காட்டி தம்பதிகள் விவாகரத்து கோர முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் வருகிறது.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரி, "தொழுநோய், இனியும் விவாகரத்து கோருவதற்கான காரணமாகாது. இப்போதைய மருத்துவச் சூழலில் தொழுநோயைக் குணப்படுத்த மருந்துகள் இருப்பதால் இனியும் அதனைக் காட்டி தம்பதிகள் விவாகரத்து கோர இயலாத வகையில் தனிப்பட்ட சட்டங்கள் (Personal Laws) மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.
இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனையொட்டி, 1869 விவாகரத்து சட்டம், முஸ்லிம் திருமணம் கலைப்புச் சட்டம் 1939, சிறப்பு திருமண சட்டம் 1954, இந்து திருமணச் சட்டம் 1955, இந்துமத ஸ்வீகரம் மற்றும் பராமரிப்புக் கட்டணம் 1956 என்ற சட்டங்களில் திருத்தம் செய்யப்படுகிறது.
இந்த ஐந்து சட்டப்பிரிவுகளுமே கணவனுக்கோ மனைவிக்கோ தொழுநோய் இருந்தால் விவாகரத்து பெறலாம் எனக் கூறுகிறது. எனவே இந்த சட்டப்பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.