Last Updated : 31 Jan, 2019 08:33 AM

 

Published : 31 Jan 2019 08:33 AM
Last Updated : 31 Jan 2019 08:33 AM

அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் தமிழ்ப் பேராசிரியர் நியமனம்

உத்தரபிரதேசத்தில் அலிகர் பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த தமிழ் பிரிவுக்கானப் பணியிடத்தில் புதிதாக ஒரு உதவிப் பேராசிரியர் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இது ‘இந்து தமிழ்’ நாளேட்டில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி வெளியான செய்தியின் எதிரொலியாக அமைந்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகமான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய மொழிகள் துறையில் தமிழுக்காகவும் ஒரு பிரிவு உள்ளது. இதில், பி.ஏ, எம்.ஏ. மற்றும் ஆய்வுக்கல்விகள் போதிக்கப்பட்டு வந்தது. இதன் பேராசிரியராக இருந்த து.மூர்த்தி கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ல் காலமானார். இவரது மறைவுக்கு பின் அவரது பணியிடத்தில் மலையாளம் மொழிக்கு கூடுதலாக ஒரு உதவிப் பேராசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால், அத்துறையில் தமிழ் பயில விரும்பும் மாணவர்கள் சேர்க்கப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில், அங்கு எம்.ஏ பயிலும் தமிழரும் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மாணவர் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினருமான கே.கவுதம், துணைவேந்தரான டாக்டர் தாரீக் மன் ஜூருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழுக்கானப் பணியிடம் காலியாகஇருப்பதை சுட்டிக் காட்டி, அப்பணியிடத்தில் தமிழுக்கான உதவிப் பேராசிரியரை நியமிக்கும்படியும் வலியுறுத்தி இருந்தார். இந்த செய்தி ‘இந்து தமிழ்’ நாளேட்டில் விரிவாக வெளியாகி இருந்தது. இதை கவனத்தில் கொண்ட தமிழக அரசு மற்றும் நாடாளுமன்ற எம்பி.க்களால் மத்திய மனிதவளம் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து, அலிகர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அமைச்சர் ஜாவ்டேகர் ஆவன செய்யும்படி குறிப்பு எழுதி அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, அப்பணியிடத்துக்கு கடந்த 12-ம் தேதி நேர்முகத்தேர்வு அலிகர் பல்கலை.யில் நடைபெற்றது. இவர்களை தேர்ந்தெடுத்த குழுவில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணவேந்தர் ம.ராசேந்திரன், டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இரா.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் முனைவர். ம.ராசேந்திரன் கூறும்போது, ‘‘அலிகர் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு போடப்பட்டிருந்த பூட்டு ‘இந்து தமிழ்’ நாளேட்டாலும், மாணவர் பிரதிநிதி கே.கவுதமாலும் திறக்கப்பட்டு விட்டது. இதற்கு தகுதியானவரை தேர்ந்தெடுப்பதில் பல்கலை. நிர்வாகம் எந்த குறுக்கீடும் செய்யாதது பாராட்டத்தக்கது. இப்பல்கலை.யில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பயின்ற காலம் மீண்டும் மலர வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

25-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட தேர்வில் கோயம்புத்தூரின் காளப்பட்டியை சேர்ந்த இரா.தமிழ்செல்வன் என்பவர் உதவிப் பேராசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கான பணி ஆணை நேற்று அனுப்பப்பட்டு, அவர் இன்று பணியில் சேர உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x