

மிகப்பெரிய இணையதள தேடுபொறி யான கூகுள் நிறுவனம், உலகில் மிகச் சிறந்த பிரமுகர்கள், வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் அவ்வப்போது தனது ‘டூடுளை’ வித்தியாசமாக வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வண்ணமயமான டூடுளை கூகுள் வடிவமைத்துள்ளது.
கூகுள் என்ற ஆங்கிலச் சொல்லின் பின்னணியில், குடியரசுத் தலைவர் மாளிகை, அதை சுற்றியுள்ள அழகிய மரங்கள் இடம்பெற்றுள்ளன. 3டி காட்சியில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘G O O G L E’ என்ற சொல்லில் உள்ள 6 ஆங்கில எழுத்துகளும் ஒவ்வொரு வண்ணத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘ஜி’ என்ற எழுத்து பச்சை நிறத்தில், கோல்ப் மைதானத்துடன் காட்சி அளிக்கிறது. ‘எல்’ என்ற எழுத்துக்கு டெல்லியில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னம் குதுப் மினார் வைக்கப்பட்டுள்ளது.
நான்காவதாக உள்ள மற்றொரு ‘ஜி’ என்ற எழுத்து மயில் மீது அமர்ந் திருப்பது போல் உள்ளது. மேலும் இந்த எழுத்து யானையைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. யானையும் மயிலும் இந்தியாவின் சின்னங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தவிர கூகுள் சொல்லில் உள்ள 2 ‘ஓ’ எழுத்துகள் கைவினை கலையையும் இந்தியாவின் பாரம்பரியத்தையும் உணர்த்துவதாக உள்ளன.
குடியரசு தின விழாவில் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெறும். ஒவ்வொரு வாகனமும் இந்தியாவின் சிறப்பை விளக்கும். அதுபோல் கூகுள் என்ற ஆங்கிலச் சொல்லின் 6 எழுத்துகளும் ஒவ்வொரு வாகனத்தில் வருவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன.