Last Updated : 18 Jan, 2019 04:23 PM

 

Published : 18 Jan 2019 04:23 PM
Last Updated : 18 Jan 2019 04:23 PM

10 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள 51 பெண்கள் சபரிமலையில் தரிசனம்: கேரள அமைச்சர் தகவல்

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் மண்டல மகரவிளக்கு பூஜை காலகட்டத்தில் மட்டும் 10 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள 51 பெண்கள் தரிசனம் செய்திருப்பதாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதியன்று அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்ய இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், கோயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தது.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில காலம் போலீஸ் பாதுகாப்பில் இருந்துவிட்டு வீடு திரும்பிய கனகதுர்கா அவரது மாமியாரால் தாக்கப்பட்டதாகப் புகார் கூறினார். பின்னர் தனக்கு பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த இளம் பெண்கள் இந்து, கனகதுர்காவுக்கு 24 மணி நேரமும் கேரள அரசு பாதுகாப்பு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் இது தொடர்பாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக 7,564 பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். இதில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட 51 பெண்கள் இதுவரை சன்னிதானத்துக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் மட்டுமே போலீஸாரின் பாதுகாப்பு கோரினார்கள்.

இது தொடர்பான அறிக்கையை நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளோம். இன்னும் அதிகமான பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள், ஆனால், அவர்களின் வயதை அரசால் அறியமுடியவில்லை.

உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில், பாலின சமத்துவத்துக்கான தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், சபரிமலையில், பெண்களின் வயதை அறிந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிப்பது சட்டவிரோதமாகும்.

சபரிமலை செல்லப்போவதாக முன் கூட்டியே சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்தவர்கள் மட்டும்தான் பெரிய அளவில் எதிர்ப்பைச் சந்தித்துள்ளனர். மற்றபடி கோயிலுக்கு நிறைய பெண்கள் எந்த ஆரவாரமும் இல்லாமல் சென்று வந்திருக்கின்றனர்" என்றார் அமைச்சர் சுரேந்திரன்.

போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ள பெண்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, ஆந்திரா, கோவா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களே என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x