

உ.பி. மாநிலம் புலந்த்ஷெஹரில் மாட்டிறைச்சி தொடர்பாக எழுந்த கலவரத்தில் காவல்துறை உயரதிகாரி சுபோத் குமார் சிங் சுடப்படுவதற்கு முன்பாக அவரை கோடரியால் தாக்கிய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கலுவா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
உ.பி.யில் உள்ள புலந்த்ஷெஹரின் மஹாவ் கிராமத்தில் கடந்த 3- ம் தேதி பசு வதையின் பெயரில் கலவரம் நிகழ்ந்தது. இதில், புலந்த்ஷெஹரின் சாய்னா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் சிங் மற்றும் மாணவர் சுமித் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
கலவரத்தை நடத்தியதாகவும், இருவரது கொலை வழக்கிலும் முக்கியக் குற்றவாளிகளாக புலந்த்ஷெஹர் மாவட்ட பஜ்ரங் தளம் அமைப்பாளரான யோகேஷ் ராஜ், அவரது அமைப்பு சகாக்களான ஷிகார் அகர்வால் மற்றும் உபேந்திர ராகவ் ஆகியோர் மீது வழக்கு பதிவானது. மேலும், வழக்கில் குறிப்பிட்ட 76 பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தலைமறைவாக உள்ளனர்.
சுபோத் குமார் சிங்கிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைச் சுட்ட பிரசாந்த் நாத் என்பவனை போலீஸார் வியாழனன்று கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் சுபோத் குமார் சிங் சுடப்படுவதற்கு முன்பாக கோடரியால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கோடரியால் தாக்கியதாகக் கருதப்படும் குற்றவாளி கலுவா என்பவரை போலீஸார் தேடி வருந்தனர். இந்தநிலையில் புலந்த்ஷெஹர் பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த கலுவாவை நேற்று இரவு உ.பி போலீஸார் கைது செய்தனர்.
கலவரம் நடக்கும்போது தான் கோடாரியால் மரம் ஒன்றை வெட்டிக் கொண்டு இருந்ததாவும், அப்போது சிலர் காவல்துறை அதிகாரியை தாக்கியதை பார்த்து அவரை தாம் கோடாரியால் தாக்கியதாகவும் போலீஸார் நடத்திய விசாரணையில் கலுவா தெரிவித்துள்ளார். கலுவாவைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.