

கொல்கத்தாவில் நடைபெற்ற பாஜக எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருஹன் சின்ஹா, வாஜ்பாய் காலத்தில் கட்சியில் ஜனநாயகம் இருந்தது, ஆனால் இப்போது சர்வாதிகாரமே இருக்கிறது என சாடியுள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த பிராந்திய, தேசியக் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 19 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருஹன் சின்ஹா, "இதுபோன்ற உயிர்ப்புள்ள இத்தனை லட்சம் மக்கள் கூடிய கூட்டத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. நம் தேசத்துக்கு புதியதொரு தலைமையைக் கொடுக்கவே நாம் அனைவரும் இங்கே இருக்கிறோம்.
என்னிடம் நிறைய பேர் நீங்கள் பாஜகவில் இருந்து கொண்டே ஏன் பாஜகவுக்கு எதிராகப் பேசுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். நான் பதில் சொல்ல வேண்டியது பாரத மக்களுக்குத்தானே தவிர பாஜகவுக்கு அல்ல. வாஜ்பாய் காலத்தில் ஜனநாயகம் இருந்தது; இப்போது சர்வாதிகாரமே இருக்கிறது. பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி வரிவிதிப்பும் தேசத்தை சிதைத்துவிட்டது.
ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் விமானங்களுக்கான விலை 41% அதிகரித்திருப்பதாக என்.ராம் கூறியிருக்கிறார். நம்மிடம் சுகோய் போர் விமானங்களைக் கட்டமைக்கும் வல்லமை படைத்த HAL எச்.ஏ.எல். இருக்கிறது. அப்புறம் ஏன் அவர்களை இப்பணியில் ஈடுபடுத்தவில்லை. மோடி, நதியில்லாத இடத்தில் பாலம் கட்டுவதாக உறுதி அளிப்பார்.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் நான் பாஜகவில் இருந்து தூக்கி எறியப்படுவேன் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், இதுதான் நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான சரியான தருணம். " எனப் பேசினார்.
முன்னதாக, நேற்று மக்களவை தேர்தலுக்குப் பின்னால் மம்தா பிரதமர் ஆவார் என்று நினைக்கிறீர்களா? என சத்ருஹன் சின்ஹாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "பிரதமர் யார் என்பதை மக்களும், தேர்தலுக்குப் பின்னர் வாக்கு பலத்தைப் பொருத்து தேர்வு செய்வர். ஆனால் மம்தா நிச்சயமாக தலைமைக்கான சிறப்பு அந்தஸ்து கொண்ட இடத்தில் இருக்கிறார். அவர் இனியும் பிராந்தியத் தலைவர் அல்ல முன்னணி தேசியத் தலைவர்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.