

நாட்டுக்காக சேவை செய்யும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது, ஆனால், பாஜகவுக்கு எதிராக சந்தர்ப்பவாத கூட்டணியும், வாரிஅரசியல் கட்சிகளும் இருக்கின்றன என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.
தமிழகத்தில் உள்ள தேனி, விருதுநகர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் முறையில் பிரதமர் மோடி இன்று உரையாடினார். அப்போது அவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:
எதிர்க்கட்சியில் உள்ள நம்முடைய நண்பர்கள் குழப்பத்தோடு இருக்கிறார்கள். மோடியின் ஆட்சி மோசமானது என்று சொல்வதற்கு அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்து தேர்தலைச் சந்திக்கிறார்கள்.
சந்தர்ப்பவாத கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களுக்கென ராஜியத்தை அமைக்க முயல்கிறார்கள். ஆனால், நாங்கள் மக்களுக்கு அதிகாரம் அளிக்கக் கேட்கிறோம். பாஜகவுக்கு எதிராக உருவாகியுள்ள கூட்டணி நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானது. தங்களுக்குரிய ஆதாயம் கிடைத்தவுடன் அவர்கள் பிரிந்துவிடுவார்கள்.
மற்ற கட்சிகளைப் போல் நாங்கள் பிரித்தாளும் அரசியலில் ஈடுபடவில்லை, வாக்கு வங்கிக்காக ஆட்சி செய்யவில்லை. ஒவ்வொரு வழியிலும் நாட்டுக்குச் சேவை செய்ய விரும்புகிறோம்.
வரும் மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கும், நாட்டுக்கும், நம்முடைய வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்ல மிகவும் முக்கியமானதாகும். நாம் ஒருபக்கம் வளர்ச்சித்திட்டங்களோடு இருக்கிறோம், ஆனால் மற்றொரு பக்கம் சந்தர்ப்பவாதகூட்டணியும், வாரிசு அரசியல் கட்சிகளும் இருக்கின்றன.
விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும், பாஜக அரசோடு பிணைப்புடன் இருக்கிறார்கள். நம்முடைய முன்னுரிமை என்பது முதல்முறையா வாக்களிக்கும் இளைஞர்களை நோக்கி இருக்க வேண்டும், முதல்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் வாரிசு அரசியலில் நாட்டம் இல்லாதவர்களாக இருப்பார்கள், அதேசமயம், வளர்ச்சியை எதிர்பார்ப்பார்கள்.வாக்குறுதியை ஏற்காமல், செயல்பாட்டில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு நாடகம் பிடிக்காது, சிறப்பாக அரசு செயல்படுகிறதா என்பதைக் கவனிப்பார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.