

காங்கிரஸைச் சேர்ந்த ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மீதான நிலமோசடி வழக்கில் அவரது வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஹரியாணா மற்றும் டெல்லியில் பல இடங்களில் ஏராளமான அதிகாரிகள் ஒரே நேரத்தில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஹரியாணா மாநில முதல்வராக கடந்த 2014-ம் ஆண்டு வரை இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹூடா.
இவர், அம்மாநில நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். அப்போது, தொழில் பேட்டைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக சிபிஐ-யால் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், 14 பேருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, ஹுடா மற்றும் அவரது முதன்மைச் செயலாளராக இருந்த ஷட்டார் சிங், நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் 2 பேர் என நான்கு பேர் சேர்க்கப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே சிபிஐ விசாரணை நடத்தியது. ஹூடா மீது விசாரணை நடத்தி மாநில ஆளுநர் சத்யநாராயண் ஆர்யா ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று டெல்லி உட்பட 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பூபிந்தர் சிங் ஹூடா வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சிபிஐ அதிகாரபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவில் விவரங்கள் தெரிய வரும்.