

நடிகர் சல்மான் கான் மீதான வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், சட்டம் அனைவருக்கும் சமமானது என்று கண்டித்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகில் உள்ள கிராமத்தில் படப்பிடிப்பு நடைபெற்றபோது நடிகர் சல்மான் கான் அப்பகுதியில் மான் வேட்டையாடினார்.
இதுதொடர்பாக ஒரு வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டு களும் இன்னொரு வழக்கில் ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்த சல்மான் கான் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார்.
பிரிட்டன் விசா பெறுவதற்காக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறை தண்டனையை சஸ்பெண்ட் செய்து கடந்த நவம்பரில் உத்தர விட்டது.
உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து ராஜஸ்தான் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஜே.முகோபதாய, பி.சி.பந்த் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அதிக வரி செலுத்துபவர் என்ற முறையில் தொழில்ரீதியாக உலகம் முழுவதும் சென்றுவர தனக்கு உரிமை உண்டு என்று சல்மான்கான் முன்பு வாதிட்டிருந் தார். மேலும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தனிப்பட்ட முறையில் எந்தச் சலுகையும் காட்டவில்லை என்றும் அவர் தனது பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கள், ‘சட்டம் அனைவருக்கும் சமமானது. தண்டனை பெற்றவர்கள் யாராக இருந்தாலும் ஒரே நடைமுறைதான். ஒருவருக்கு சலுகை அளிக்கப்பட்டால் அது அனைவரையும் பாதிக்கும்’ என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கில் அக்டோபர் 28-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.