

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தனக்குரிய நியாயங்களை நிரூபிக்க போதுமான வாய்ப்பு அளிக்காமல் வெறுப்புணர்வால் நீக்கப்பட்டுள்ளார், தவறான முன்னுதாரணங்களை மத்திய அரசு கற்பித்துவிட்டது என்று சிவசேனா கட்சி சாடியுள்ளது.
சிபிஐ உயர் அதிகாரிகள் அலோக் குமார் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப் புகார் எழுப்பியதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் 23-ம் தேதி இரவு கட்டாய விடுமுறையில் அனுப்பியது.
கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல வைத்த மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும் தேர்வுக் குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து 77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்த அலோக் வர்மா பணியில் இணைந்தார். அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு நடத்திய கூட்டத்துக்குப் பிறகு அலோக் வர்மா நீக்கப்பட்டார், மேலும், ஐபிஎஸ் சேவையில் இருந்தே அலோக் வர்மா ராஜினாமா செய்தார்.
இதுவிவகாரம் குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டு தன்மீது சுமற்றப்படும்போதெல்லாம் தன்னைக் குற்றமற்றவர் என நிரூபிக்க பிரதமர் மோடி ஒவ்வொரு தளத்தையும் பயன்படுத்த முடியுமென்றால், அதேவாய்ப்பை ஏன் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு வழங்கப்படாமல் வெளியே அனுப்பப்பட்டார்.
சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் நியமிக்கப்பட்டால் பல்வேறு விவகாரங்களில் முக்கிய ரகசியங்கள் வெளியே வந்துவிடும் என்பதால், உடனடியாக அலோக் வர்மா நீக்கப்பட்டாரா?
மற்றொரு அதிகாரியான அஸ்தானா பிரதமர் அலுவலகத்தின் ஆதரவோடு செயல்பட்டு வருகிறார். அவர் சிபிஐ அலுவலகத்தையே மத்திய அரசின் அடிமைபோல் செயல்பட முயற்சித்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் அலோக் வர்மா தன்மீதான நியாயங்களை நிரூபிக்க போதுமான அளவு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அலோக் வர்மாவை திடீரென நீக்கி, தவறான முன்னுதாரணங்களை மத்திய அரசு ஏறப்படுத்திவிட்டது.
மத்திய ஊழல்தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் உத்தரவால் மட்டும் அலோக் வர்மாவை தன்னிச்சையாக நீக்கிவிட முடியாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
உண்மையாகவே அலோக் வர்மா ஊழல் செய்திருந்தது தெரியவந்தால், அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஏன் தீயணைப்புத் துறை, ஊர்காவல் துறைக்கு இயக்குநராக நியமிக்கப்பட வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்கூட ஊழல் இல்லாத அமைப்பு இல்லை. அலோக் வர்மா, அஸ்தானாவுக்கும் இடையே பிரச்சினை தொடங்கியபோதே, பிரதமர் மோடி தலையிட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது.