

ஹைதராபாத் நகரில் வியாழக்கிழமை மகாத்மா காந்தி வேடமிட்டு பிச்சையெடுத்த ஒருவர் சிகெரெட் பிடித்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர்.
பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில், சிலர் உடல் முழுவதும் சில்வர் வண்ணத்தை பூசிக்கொண்டு மகாத்மா காந்தி சிலையைப் போல அசையாமல் நின்றுகொண்டு பிச்சை எடுப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.
இதேபோல, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் பொது தலைநகரான ஹைதராபாதின் கோட்டி பகுதியில் உள்ள பிரபல கூகுல் சாட் கூட்டு ரோடில் ஒருவர் நின்றுகொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்த இடத்தில் சில மணி நேரம் பிச்சை எடுத்த அவர் சற்று ஓய்வு எடுத்தார். அந்த நேரத்தில் டீ குடித்துவிட்டு சிகெரெட் பிடித்தார். அந்த வழியாகச் சென்ற மொஹதி பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சித் இதை பார்த்து ஆத்திரமடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்த சுல்தான் பஜார் காவல் நிலையத்துக்கு சென்று இதுகுறித்து புகார் செய்தார். பிச்சைக்காரர் ஒருவர் காந்தி வேடம் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்ததாகவும் இது காந்தியை அவமானப்படுத்துவதாக உள்ளது என்றும் தனது புகாரில் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அந்த பிச்சைக்காரரை போலீஸார் கைது செய்தனர்.