கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருடன் ராகுல் காந்தி திடீர் சந்திப்பு
Updated on
1 min read

கோவா மாநில சட்டப்பேரவைக்கு இன்று திடீரென வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கரைச் சந்தித்துப் பேசி அவரது உடல் நலன் குறித்து விசாரித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அவரின் தாயார் சோனியா காந்தியும், தனிப்பட்ட ஓய்வுக்காக கோவா மாநிலம் வந்துள்ளனர். நேற்று முன்தினம் ராகுல் காந்தி ட்விட்டரில் மனோகர் பாரிக்கரை ரஃபேல் போர் விமானம் தொடர்பாக கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இன்று அவரைச் சந்தித்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டிருந்த ட்விட்டில், " ரஃபேல் போர் விமானம் தொடர்பாக கோவா ஆடியோ டேப் வெளியாகி 30 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை எந்தவித விசாரணை நடத்தப்படவும் இல்லை, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. அமைச்சர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.

கோவா முதல்வர் பாரிக்கர் வைத்திருக்கும் ரஃபேல் ரகசிய ஆதாரங்கள் பிரதமரைக் காட்டிலும் அதிகாரத்தை அவருக்குக் கொடுத்து இருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கணைய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது சீரடைந்து இருக்கும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரைச் சந்திக்க சட்டப்பேரவைக்கு இன்று ராகுல் காந்தி சென்றிருந்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் மிருதுளா சென் உரைக்குப் பின் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்திருந்தனர். அதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பே சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சிகள் அறைக்குச் சென்ற ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

அதன்பின் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று முதல்வர் மனோகர் பாரிக்கரைச் சந்தித்தார். இருவரும் ஏறக்குறைய 15 நிமிடங்கள் வரை பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மனோகர் பாரிக்கரின் உடல் நிலையை விசாரித்து விட்டு ராகுல் காந்தி வெளியேறினார். ஊடகத்திடம் பேச ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.

முதல்வர் மனோகர் பாரிக்கரை ராகுல் காந்தி சந்தித்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் கவேல்கர் கூறுகையில், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. பாரிக்கர் உடல் நிலையை ராகுல் காந்தி விசாரித்துச் சென்றார். தனிப்பட்ட சந்திப்பு என்பதால், அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in