

இந்து - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை எரிக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஓ.பி.ராஜ்பார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் சுகல்தேவ் பகுஜன் சமாஜ் கட்சி இடம்பெற்றிருக்கிறது. இதன் தலைவரும் உ.பி. அமைச்சருமான ராஜ்பார் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளை தெரிவித்து ஊடக வெளிச்சத்துக்கு வந்துவிடுவார்.
அந்த வரிசையில், மத ரீதியாக வேற்றுமையை உண்டு பண்ணி மக்களைத் தூண்டிவிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை மக்களே எரித்துக் கொள்ள வேண்டும் என்று சுகல்தேவ் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஓ.பி.ராஜ்பர் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று பேசிய ராஜ்பார், "இதுவரை இந்து - முஸ்லிம் கலவரத்தில் எந்த ஒரு அரசியல் பிரமுகராவது இறந்திருக்கிறாரா? எந்த அரசியல் பிரமுகரும் மதக்கலவரத்தில் ஏன் இறப்பதில்லை? மத ரீதியாக வேற்றுமையை உண்டு பண்ணி மக்களைத் தூண்டிவிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை மக்களே எரிக்க வேண்டும்.
இதன்மூலம் இனி நாம் கலவரத்தில் யாரையும் எரிக்கக் கூடாது என்பதை அப்பேற்பட்ட அரசியல்வாதிகள் புரிந்துகொள்வார்கள்" என்று கூறினார்.
அவர் மேலும் பேசும்போது, "இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க முயல்பவர்களே, இந்திய அரசியல் சாசனத்தின்படி தேர்தலில் வாக்களிப்பவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
முன்னதாக, சனிக்கிழமை ஒரு கூட்டத்தில் பேசிய ராஜ்பார், "பாஜக விரும்பவில்லை என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகிக் கொள்ள தயாராக இருக்கிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.