Published : 19 Jan 2019 04:52 PM
Last Updated : 19 Jan 2019 04:52 PM

மம்தா தலைமையில் இந்தியாவை அழிக்க துடிக்கும் கோமாளிகள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக பதிலடி

பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி உரையாற்றி வரும் நிலையில் இந்த கூட்டத்தை அக்கட்சி தலைவர்கள் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரபிரதேசத்தில் சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று காங் கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவின் பிரிகேட் பேரேடு மைதானத்தில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

கொல்கத்தாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டை பாஜக தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேற்கு வங்காளம் மாநில பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் கூறுகையில் ‘‘ஜோதிபாசு ஆட்சிக்காலத்தில் நடந்ததைப்போல் மம்தா ஆட்சியிலும் மேற்கு வங்கம் மீண்டும் ஒரு சர்க்கஸ் காட்சியை பார்க்க நேரிட்டுள்ளது.

இந்தியாவை அழிக்க துடிக்கும் கோமாளிகளும், பொய் பேசுவதில் வல்லவர்களும் ஒன்றுசேர்ந்துள்ளனர்’’ எனக் கூறினார்.

இதேபோல், பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராகுல் சின்ஹா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஊழல்கறை படிந்த தலைவர்கள் அனைவரும்  மோடிக்கு எதிராக போரிட ஒன்று திரண்டுள்ளனர். இந்த ஊழல் கும்பலுக்கும்,  தேசவிரோதிகளுக்கும் எதிரான போரில் மோடியின் பின்னால் நாட்டு மக்கள் அணி திரள்வார்கள்’’என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x