Published : 31 Jan 2019 06:00 PM
Last Updated : 31 Jan 2019 06:00 PM

உலக வெப்பமயமாதலுக்குக் காரணமாகும் பசுவின் கோமியம்

பசுவின் கோமியத்தில் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயு உலக வெப்ப மயமாதலுக்குக் காரணியாக அமைகிறது என்று சர்வதேச ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்த வெப்பமண்டல வேளாண்மைக்கான சர்வதேச மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. கொலம்பியா, அர்ஜென்டினா, பிரேசில், நிகராகுவா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியான ஆய்வு முடிவுகள் பின்வருமாறு:

''மருத்துவப் பயன்களைத் தருவதாகக் கூறப்படும் பசுமாட்டின் சிறுநீர் (கோமியம்) வெப்பமயமாதலுக்கான காரணியாக உள்ளது. மாட்டின் சிறுநீரில் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O) வாயு, கார்பன் - டை - ஆக்ஸைடைக் காட்டிலும் 300 மடங்கு அதிக வலிமை கொண்டது.

இந்த சிறுநீரை, தரிசு நிலங்கள் உள்ளிட்ட பண்படுத்தப்படாத நிலங்களில் பயன்படுத்தும்போது, நைட்ரஸ் ஆக்ஸைடின் வெளியேற்றம் 3 மடங்கு அதிகமாக இருக்கிறது.

கால்நடைகளின் மூலம் வெளியாகும் பசுமை இல்ல வாயுவான மீத்தேன், வெப்ப மயமாதலில் பங்கு வகிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் பசுவின் கோமியத்தால் ஏற்படும் விளைவு அறியப்படாமலே இருக்கிறது.

இதற்காக ஆய்வாளர்கள் மாடுகளில் இருந்து சிறுநீரை சேகரித்துக் கொண்டனர். அதை மேய்ச்சல் பகுதியில் உள்ள பண்படுத்தப்பட்ட விளைச்சல் நிலம் மற்றும் பண்படுத்தப்படாத நிலங்களில் தெளித்தனர். இதற்காக 500 மி.லி. சிறுநீர் மாதிரிகள் தெளிக்கப்பட்டன. இதில் ஏழில் ஆறு நிலங்களில் பண்படுத்தப்படாத நிலங்களில் இருந்து வெளியேறிய நைட்ரஸ் ஆக்ஸைடின் அளவு 3 மடங்கு அதிகமாக இருந்தது.

பண்படுத்தப்படாத நிலங்கள் அதிக அளவிலான நைட்ரஸ் ஆக்ஸைடை வெளியேற்றின. அதே நேரத்தில் நல்ல நிலத்தில் நைட்ரஜன் கலவைகள் வினைபுரிந்து, தேவையற்ற நைட்ரஜன்கள் மட்டுமே வெளியேறின.

இந்திய நிலங்களில் சாணமும் கோமியமும் ஒன்றாகக் கலக்கப்பட்டு உரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடைகள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் பெரிய நாடாக உள்ளது. அதே நேரத்தில் பயனற்ற நிலங்களும் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. இதற்கும் நைட்ரஜன் வாயு வெளியேற்றத்துக்கும் சம்பந்தம் உள்ளது.

இந்தியாவில் உத்தரப் பிரதேசம் 13.1% நைட்ரஸ் ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. மத்தியப்பிரதேசம் 8 சதவீதமும் மகாராஷ்டிரா 7.5 சதவீத நைட்ரஸ் ஆக்ஸைடையும் வெளியேற்றுகின்றன என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகப் பேராசிரியரும் சர்வதேச நைட்ரஜன் இனிஷியேட்டிவ் என்ற அமைப்பின் தலைவருமான என்.ரகுராம், ''இந்தியாவில் ஒரு கால்நடை எவ்வளவு கோமியம் மற்றும் சாணத்தை உற்பத்தி செய்கிறது, எத்தனை கால்நடைகள் உள்ளன என்பதற்காக தரவுகள் 2012 கால்நடைகள் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்டன. ஆனால் பசுவின் கோமியம் வெளியிடும் நைட்ரஸ் ஆக்ஸைடின் அளவு குறித்த விவரங்கள் இல்லை.

இதுபோன்ற ஆய்வுகள் கால்நடைகள் வெளியிடும் வாயுக்கள் குறித்து அறிந்துகொள்ள உதவும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x