பத்திரிகையாளர் கொலை வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பத்திரிகையாளர் கொலை வழக்கில் ராம் ரஹீம் குற்றவாளி: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Updated on
2 min read

பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். கடந்த 1999-ம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற குர்மீத் சிறையில் அடைக்கப்பட்டார்.

ராம் ரஹீம் பற்றிய உண்மைகளை வெளியிட்ட பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி 2002-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் கொன்றதாக என புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் தீ்ர்ப்பளித்த நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. கடந்த முறை ராம் ரஹீமுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது பெரும் கலவரம் வெடித்தது. அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து பஞ்ச்குலா மட்டுமின்றி ஹரியாணாவின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

யார் இந்த ராம் ரஹீம்?

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டம், கருசார் மோதியா கிராமத்தில் ஜாட் சீக்கிய குடும்பத்தில் 1967 ஆகஸ்டில் குர்மீத் ராம் ரஹீம் சிங் பிறந்தார். 7-வது வயதிலேயே தேரா சச்சா அமைப்பில் இணைந்தார். 23-வது வயதில் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார்.

தேரா சச்சா சவுதாவின் தலைமை பொறுப்பை குர்மீத் ராம் ரஹீம் சிங் ஏற்ற பிறகு, அந்த அமைப்பு பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டது. சிர்ஸாவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் மைதானம் என பல வசதிகளை ஏற்படுத்தியது. பல்வேறு சமூக நலத் திட்டங்களை குறுகிய காலத்தில் நிறைவேற்றி கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. 2010-ல் ராம் ரஹீம் சிங்கின் அறிவுரையின்படி தேரா சச்சா சவுதாவின் 1000 தொண்டர்கள் பாலியல் தொழிலாளிகளை திருமணம் செய்தனர்.

‘மெஸஞ்சர் ஆப் காட்’ என்ற தலைப்பில் 5 திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2007-ல் சீக்கியர்களின் மத குருவான கோவிந்த் சிங் போன்று உடையணிந்து விளம்பரம் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக தேரா சச்சா சவுதா மன்னிப்பு கோரியது. 2015-ம் ஆண்டில் தன்னை விஷ்ணு போல சித்தரித்து வீடியோ வெளியிட்டார். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

பாலியல் பலாத்கார சர்ச்சை எழுந்தபோது ஆசிரமத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் மர்ம மான முறையில் கொல்லப்பட்டார். ஆசிரமம் குறித்து எழுதிய பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். தேரா சச்சா சவுதா ஆசிரமங்களைச் சேர்ந்த 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in