

மகாராஷ்டிர மாநிலம் பீட் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மற்றொரு மகளை பாஜக களமிறக்கி உள்ளது. இவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக கோபிநாத் முண்டேவை முன்னிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குள் அவர் சாலை விபத்தில் இறந்தது கட்சிக்கு ஒரு பெரிய இழப் பாகும். இதை சரிக்கட்டும் வகையில், பீட் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுமாறு அவரது மனைவி பிரதிண்யா முண்டேவை கேட்டபோது அவர் மறுத்து விட்டார். எனவே அவரது மகள் டாக்டர். பிரீத்தம் காண்டேவை (31) களமிறக்கி உள்ளோம்” என்றனர்.
மகாராஷ்டிர மாநில பாஜகவில் மிகவும் செல்வாக்கு மிகுந்த தலைவ ராகக் கருதப்பட்டவர் கோபிநாத் முண்டே. தனது சகோதரனாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு பாஜக தலைவர் பிரமோத் மஹாஜ னின் மைத்துனரான முண்டே, கடந்த மே 3-ம் தேதி சாலை விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். இதனால் அவரது பீட் மக்களவை தொகுதிக்கு வரும் அக்டோபர் 15-ல் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் அனுதாப வாக்குக ளைப் பெறுவதற்காக, முண்டேவின் இரண்டாவது மகளான பிரீத்தமை பீட் தொகுதியில் பாஜக களமிறக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவ பட்ட மேற்படிப்பு பயின்ற பீரித்தம், தனது பொறியாளர் கணவரான கவுரவ் காண்டேவுடன் மும்பையில் வசித்து வருகிறார். பீட் தொகுதியில் முண்டேவின் குடும்பத்தினர் போட்டியிட்டால் அவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்ற முந்தைய அறிவிப்பை செயல்படுத்தி இருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.
இவரைப்போல் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறிய சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும், முண்டேவின் மகள்கள் பங்கஜா மற்றும் பிரீத்தம் முண்டே ஆகிய இருவரையும் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மூத்த மகளான பங்கஜா முண்டே, சொந்த ஊரான பர்லி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் இப்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
பங்கஜாவை எதிர்த்து அவரது ஒன்றுவிட்ட சகோதரர் தனஞ்செய் முண்டே தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர், பங்கஜாவின் வளர்ச்சியை பொறுக்காமல், பாஜகவிலிருந்து விலகி சில வாரங்களுக்கு முன்பு சரத் பவார் கட்சியில் இணைந்தார்.
முண்டேவின் மூன்றவது மகள் யஷாஸ்ரீ முண்டே சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற பிரச்சார யாத்திரையில் யஷாஸ்ரீ கலந்து கொண்டார். யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூன்று சகோதரிகளையும் பாராட்டி இருந்தார்.