Published : 08 Jan 2019 04:44 PM
Last Updated : 08 Jan 2019 04:44 PM

‘‘ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது’’ - ராகுல் காந்தி கடும் விளாசல்

சிபிஐ இயக்குநராக அலோக் வர்மாவை மீண்டும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது, ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கடந்த 1984-ம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர். கடந்த 2016 டிசம்பரில் சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2017 -ம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்றபோது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

இதையடுத்து இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என தீர்ப்பளித்தனர்.

மேலும், அவரே சிபிஐ இயக்குநராக தொடர்வார் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். அதேசமயம் அதிகார சர்ச்சை தொடர்பான புகார் நிலுவையில் இருப்பதால் அலோக் வர்மா முக்கிய முடிவுகள் எதையும் எடுக்ககூடாது எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.  அவர் மீதான புகாரை பிரதமர் மோடி தலைமையிலான விசாரணை குழு விசாரித்து முடிவெடுக்கும் வரை இந்த நிலை தொடர வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது

ரஃபேல் விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ இயக்குனர் அலோக்  வர்மா தொடங்க இருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். உச்ச நீதிமன்றம் தலையிட்ட தற்போது நீதியை நிலைநாட்டியுள்ளது.

இதன் மூலம் உண்மை வெளியே வரும். ரஃபேல் விவகாரத்தில் தவறு இழைத்தவர்கள் இனிமேல் தப்பிச் செல்ல முடியாது. ரஃபேல் ஒப்பந்தத்தத்தின் மூலம், மக்களின் வரிப்பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து சந்தேகத்தின் நிழல் படாமல் தனது நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தைரியம் இல்லாமல் பிரதமர் மோடி ஒடினார். ஆனால் மக்கள் மன்றத்தில் நடைபெறும் விவாதத்தில் இருந்து அவர் தப்பிச் செல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x