

இந்தியா 70-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவரும் வேளையில், காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கோடு இருக்கும் பூஞ்ச் பகுதியில் போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும் பாகிஸ்தான் படையினர் இன்று மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை பூஞ்ச் மற்றும் ராஜோவ்ரியில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள நான்கு இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி இன்று மீண்டும் அத்துமீறல் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, பாகிஸ்தானிய துருப்புக்கள் தினசரி அடிப்படையில் சர்வதேச எல்லைப் பகுதிகளைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடுவதை இலக்ககாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் கவர்னர் எஸ்.பீ. மாலிக் தனது குடியரசு தின உரையில் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாத்து வருவதாக பாதுகாப்புப் படையினரைப் பாராட்டினார்.
குடியரசு தின விழாவில் காஷ்மீர் கவர்னர் எஸ்.பீ.மாலிக் பேசியதாவது:
''நமது பாதுகாப்புப் படைகள், கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே இதுவரை இல்லாத அளவுக்கான பெரும் எண்ணிக்கையிலான நடுநிலையான செயல்திறன் கொண்ட பயனுள்ள அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இத்தகைய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டு தங்கள் உயிர்களை இழந்த ராணுவ மற்றும் காவல் படையினரை நாம் வணங்குகிறோம்.
நமது அண்டை நாடு அமைதி மற்றும் ஒற்றுமையைச் சீர்குலைக்க பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது. பயங்கரவாதத்தை இந்தியாவிற்குள் ஊடுருவவும், போர் நிறுத்த விதிமீறல்கள் எல்லையோரம் வசிக்கும் மக்களுக்கு துன்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதைத் தடுப்பதற்காக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
மேலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நாம் பலப்படுத்தியுள்ளோம். இது நமது அனைவரின் கூட்டுப் பொறுப்பு ஆகும். பயங்கரவாதிகளை எல்லைக்குள் நுழையவிடாமல் தடுக்க நமது மக்களுடைய தீவிர ஒத்துழைப்பும் மிக மிக அவசியம்.''
இவ்வாறு மாலிக் பேசினார்.