

5 மாநில தேர்தல் முடிவுகளில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றிமுகம் காட்ட, தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற மத்தியப் பிரதேசத்தையும் பாஜக இழந்து விடும் நிலைமை ஏற்பட்டுள்ளதையடுத்து மாநிலங்களவை பாஜக எம்.பி. சஞ்சய் காகடே வேதனை தெரிவித்துள்ளார்.
“2014 தேர்தலில் பிரதமர் மோடி வளர்ச்சி என்பதைக் கையில் எடுத்தார். ஆனால் இப்போதோ சிலைகள், நகரத்தின் பெயர் மாற்றங்கள், ராமர் கோயில் ஆகியவற்றில் கவனம் செலுத்தியதற்கான எதிர்மறைப் பலன்களைப் பார்த்து வருகிறோம்” என்று வேதனை தெரிவித்தார்.
நாடு முழுதும் விவசாயிகள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அவர்கள் பிரச்சினையில் பரிவுடன் அக்கறை செலுத்தாமல் ரூ.3000 கோடி செலவில் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் சிலை அமைத்த விவகாரத்தைத்தான் மாநிலங்களவை எம்.பி. காகடே குறிப்பிடுகிறார்.
இந்த தேர்தல்களில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் நட்சத்திர பாஜக பிரச்சாரகராக ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தாரே தவிர அங்கெல்லாம் மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் தன் கட்சியின் பிரச்சினைகளையும் தனிமனித வழிபாட்டு வார்த்தைகளையும் பயன்படுத்தியதும் பாஜகவின் பின்னடவுக்குக் காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதே ககாடே குஜராத் தேர்தலின் போது பாஜகவுக்கு பின்னடைவு என்று கணித்தார், ஆனால் பாஜக வென்ற பிறகு தன் கருத்தை வாபஸ் பெற நேரிட்டது.
நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் விவசாயிகள் நலன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, பிரதமர் மோடி சிலபல திட்டங்களை வகுத்தார், ஆனால் அவை சரியாக அமலாக்கம் செய்யப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் ஊரக வாக்குகளை பாஜக இழந்துள்ளதாகவும் இது 2019 லோக்சபா தேர்தல்களிலும் பிரதிபலிக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.