

மேகேதாட்டு, ரபேல் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளால் இன்றும் மாநிலங்களவை முடங்கி ஒத்தி வைக்கப்பட்டது. அதுபோலவே மக்களவையும் பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நதியின் குறுக்கே, மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வரைவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை தமிழ அரசு வலியுறுத்தி வருகிறது. காவிரி ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பிரதிநிதிகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே தமிழக எம்.பி.க்கள் காவிரி விவகாரத்தை இரு அவைகளிலும் எழுப்பி டும் அமளியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் இன்றும் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் மேகேதாட்டு விவகாரத்தை எழுப்பினர்.
இதுபோலவே ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையில் அமளி செய்தனர். தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் வெவ்வேறு பிரச்சினைக்காக அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதுபோலவே மக்களவையிலும் மேகேதாட்டு பிரச்சினை எதிரொலித்தது. இதனால் பிற்பகல் 2:00 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
முதல்நாள் மறைந்து உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 12-ம் தேதி முதல் மாநிலங்களவையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை தொடர்ந்து முடங்கி வருகிறது.