ம.பி.யில் 15 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் அமைச்சர்

ம.பி.யில் 15 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் அமைச்சர்
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில்  28 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அங்கு 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்து வந்தது.

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களைக் கைப்பற்றி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. மத்தியப்பிரதேச முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

அங்கு அமைச்சர் பதவி வழங்குவதில் இழுபறி ஏற்பட்டது. மூத்த தலைவர்கள் பலரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி தருமாறு கோரியதால் காங்கிரஸ் தலைமை தலையிட்டு சமரசம் செய்தது. இதையடுத்து இழுபறி முடிந்து, மத்திய பிரதேச அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவு செய்யப்பட்டது.

28 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவர்களில் முதல்வர் கமல்நாத்தின் ஆதரவாளர்கள் 11 பேருக்கும், முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்கின் ஆதரவாளர்கள் 9 பேருக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் 7பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மாநில தலைவர் அருண் யாதவ் ஆதரவாளர் ஒருவரும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

புதிய அமைச்சர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். ஆரிப் அகியூல் என்ற முஸ்லிம் ஒருவரும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். போபால் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர். மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக ஆட்சியில் இருந்தது.

இந்த 15 ஆண்டுகாலமும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள சூழ்நிலையில் ஆரிப் அகியூலுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in