Published : 05 Dec 2018 12:27 PM
Last Updated : 05 Dec 2018 12:27 PM

‘‘வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துகிறேன்; வாங்கிக்கொள்ளுங்கள்’’ -தீர்ப்பு வெளியாகும் நிலையில் விஜய் மல்லையா திடீர் ஆவேசம்

வங்கிகளில் வாங்கிய கடன் அசல் தொகை முழுவதையும் செலுத்தி விடுகிறேன், அதை பெற்றுக்கொள்ளுங்கள் என விஜய் மல்லையா கூறியுள்ளார். விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு அளிக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடினார். அவர் மீது பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அ றிவிக்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்யவும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி, இங்கிலாந்து நீதீமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகள் உலகளாவிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தன. அதனை இங்கிலாந்திலும் பதிவு செய்தன.

சொத்துகளை முடக்கும் உலகளாவிய உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி, இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா முறையிட்டார். ஆனால், தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அதோடு விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்க இந்திய வங்கிகளுக்கு அனுமதியும் வழங்கியது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஒரு சில நாட்களில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் விஜய் மல்லையா தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘‘பொதுத்துறை வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்து திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக அரசியல்வாதிகளும், ஊடகங்களும் தொடர்ந்து எனக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றன. இது முற்றிலும் தவறானது. பணத்தை திருப்பிச் செலுத்தி விடுவதாக கர்நாடக நீதிமன்றத்தில் நான் கூறியதை பற்றி ஏன் யாரும் வெளியே சொல்வதில்லை.

விமான எரிபொருள் விலை அதிகரித்ததால், கிங்பிஷர் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. வங்கியில் கடனாக வாங்கிய பணம் நஷ்டமானது. நான் கடனாக வாங்கிய அசல் தொகை 100 சதவீதத்தையும் தந்து விடுகிறேன் என தொடர்ந்து கூறி வருகிறேன். தயது செய்து அவற்றை பெற்றுக் கொள்ளுங்கள்.

நான் கடனாக வாங்கிய தொகையை திருப்பிச் செலுத்தினால் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படாது. இதனை ஏற்க ஏன் மறுக்கிறீர்கள். 2016-ம் ஆண்டு முதலே நான் பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வருகிறேன். ஆனால் அதை பற்றி எதையும் வெளியே சொல்லாமல் எனக்கு எதிராக ஊடகங்கள் தவறான பிரசாரம் செய்கின்றன. எல்லாம் எனது முட்டாள்தனம் தான்” என தெரிவித்துள்ளார்.           

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x