Published : 02 Dec 2018 09:03 AM
Last Updated : 02 Dec 2018 09:03 AM

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க அதிபர்: பிரதமர் மோடி அழைப்பு

2019-ம் ஆண்டு நடைபெறும் நாட்டின் 69-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகத் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா பங்கேற்பார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி-20 மாநாட்டில் தென் ஆப்பிரிக்க அதிபரைச் சந்தித்தபோது, பிரதமர் மோடி இதற்கான முறைப்படியான அழைப்பு விடுத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சி ஒவ்வொரு நாட்டின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து மத்திய அரசு கவுரவிக்கிறது. இந்த ஆண்டு ஆசியான் நாடுகளின் 10 தலைவர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர், கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே அழைக்கப்பட்டு இருந்தார், 2015-ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் வந்திருந்தனர்.

இந்நிலையில் 2019-ம் ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் அழைத்திருந்தார். அவரும் வருவதாகச் சம்மதித்த நிலையில், இந்தியாவின் குடியரசு தின நேரத்தில் அமெரிக்க மாநிலங்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்பதால், அவரால் இந்தியா வர இயலாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், அர்ஜென்டினாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அங்குச் சென்றிருந்தார். அப்போது மாநாட்டின் இடையே தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசாவைச் சந்தித்து மோடி பேசினார். அப்போது, இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது, இந்தியாவின் 69-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு வருமாறு தென் ஆப்பிரிக்க அதிபர் ராம்போசாவுக்கு பிரதமர் மோடி முறைப்படி அழைப்பு விடுத்தார்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் ட்விட்டரில் கூறுகையில், “ மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் 100-வது பிறந்தநாளும் ஒன்றாக வருகிறது. தென் ஆப்பிரிக்க அதிபருக்கு குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பக்கத்தில்விடுத்துள்ள செய்தியில், “ தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசாவைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை நாடு கொண்டிடும் வேளையில், 2019-ம் ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க அதிபர் ராம்போசாவை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க அவரை நாட்டுக்கு வரவேற்பது நமக்குக் கவுரமாகும். மகாத்மா காந்திக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் மிகச்சிறந்த நட்பு இருக்கிறது அனைவருக்கும் தெரிந்ததே” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x