Last Updated : 19 Dec, 2018 11:59 AM

 

Published : 19 Dec 2018 11:59 AM
Last Updated : 19 Dec 2018 11:59 AM

2019 எங்களுடையது; எதிர்க்கட்சிகளின் மகாகூட்டணி ‘மாயை’: அமித் ஷா ஆவேசம்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 2019-ம் ஆண்டு எங்களுக்கானது. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி மாயை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆவேசமாகப் பேசினார்.

மும்பையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறும். 2019-ம் ஆண்டு எங்களுடையது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன், சிவசேனா சேர்ந்தே போட்டியிடும் என்று உறுதி கூறுகிறேன். அதற்கான பேச்சு நடந்து வருகிறது.

எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் உண்மையான தோற்றம் வித்தியாசமானது. அந்தக் கூட்டணி நிலையாக இருக்காது. அது ‘மாயை’ கூட்டணி. கடந்த 2014-ம் ஆண்டு அனைவருக்கும் எதிராக நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியைப் பிடித்துள்ளோம். எதிர்க்கட்சியின் மகா கூட்டணியில் இருப்பவர்கள் அனைவரும் மாநிலத் தலைவர்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய முடியாது.

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலம், ஒடிசா மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த ஆட்சி குறித்துதான் மக்களவைத் தேர்தலில் பேசப்படும். ஆனால், நாங்களோ கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பை உயர்த்தி, உறுதி செய்திருக்கிறோம், ஊழலைத் தோற்கடித்து இருக்கிறோம். 8 கோடி மக்களுக்கு புதிய கழிப்பிடங்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம், 2.50 கோடி மக்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம்.

இந்த தேசத்துக்கு வலிமையான அரசு அமைவது அவசியம். இது பாஜகவின் விருப்பம் மட்டுமல்ல, மக்களும் அப்படித்தான் விரும்புகிறார்கள்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நிச்சயமாக பாஜகவுக்கு ஆதரவானது இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அதே முடிவுகள் 2019-ம் ஆண்டு தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூற முடியாது. அதை தொடர்புப்படுத்துவதும் சரியல்ல. மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலை மக்களவைத் தேர்தலோடு தொடர்புபடுத்த முடியாது. இரு வகையான தேர்தலும் முற்றிலும் வித்தியாசமானவை.

மக்களுக்காகப் பணியாற்றி, அவர்களைத் திருப்திப்படுத்துவது எங்கள் பணியாகும். ஆனால், மக்களின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக இருந்தாலும்கூட அதையும் ஏற்றுக்கொள்கிறோம். நான் எந்த விதமான தேர்தல் முடிவு ஆய்வுகளுக்கும் விரோதியல்ல. ஆனால், தேர்தல் என்பது பல்வேறு முக்கிய விஷயங்கள் அடிப்படையில், தேவைகள் அடிப்படையில் நடப்பவை. ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு விதமான பிரச்சினைகள், விஷயங்கள், தேவைகள் இருக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது 6 மாநிலங்களில் ஆட்சி செய்தது. தற்போது 16 மாநிலங்களில் ஆட்சி நடக்கிறது. ஆதலால், 2019-ம் ஆண்டு எந்தக் கட்சி வெல்லும் என்பது உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் முடிந்த தேர்தலில் அடைந்த தோல்வி குறித்து பாஜக சுய பரிசோதனை செய்யும்''.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x