

கடந்த டிசம்பர் 2 மற்றும் 3, 1984 இரவு போபாலின் கார்பைடு ஆலையில் கசிந்த விஷவாயுவால் சுமார் 15,000 உயிர்கள் பலியாகின. பாதிக்கப்பட்ட ஐந்து லட்சம் பேருக்கு 34 வருடங்கள் கழிந்த பின்பும் முறையான நிவாரணம் கிடைக்காமல் உள்ளது.
ம.பி. மாநிலம் போபாலின் யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் ஆலையில் ஏற்பட்ட கசிவு இன்றுவரை உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தாகக் கருதப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ உதவி, நிவாரணம் மற்றும் இழப்பீடுகளுக்காகப் பல்வேறு பொதுநல அமைப்புகள் போராடி வருகின்றனர்.
ஆனால், இன்றுவரை பாதிக்கப்பட்ட ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இவர்கள் பாதிப்பிற்குக் காரணமானவர்களும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரைகளில் இன்னும் என்பது சதவீதம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதை நிறைவேற்ற வலியுறுத்தி, அதன் நினைவு தினத்தை முன்னிட்டு போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் போபாலில் பேரணி நடத்தப்பட்டது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையதளத்திடம் போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மகளிர் தொண்டு நிறுவனத்தின் தலைவர் அப்துல் ஜப்பார் கூறும்போது, ''இதில் உயிரிழந்த 20,000 பேர் குடும்பத்திற்கு இன்றுவரை உரிய நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுகு வேலைவாய்ப்பு அளிக்கப்படாததால் கவலைக்குரியதான அவர்கள் வாழ்க்கை மேலும் மோசமடைந்து வருகிறது'' எனத் தெரிவித்தார்.
போபால் தகவல் மற்றும் நடவடிக்கை குழுவின் தலைவர் ரச்சனா திங்கரா கூறும்போது, ''விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க ஒதுக்கப்பட்ட நிவாரணத்தொகையில் பெரும்பாலானவற்றை, சாலைகள் மற்றும் பூங்காக்கள் அமைக்க திருப்பி விடப்பட்டு விட்டன. விஷவாயுவால் பாதிக்கப்பட்டு பல்வேறு உபாதைகளுக்கு உள்ளனவர்கள் இன்னும் கூட அதில் இருந்து விடுபட முடியாமல் உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.