

டெல்லி அருகே குர்கிராமில் பள்ளி வகுப்பறையில் பேசியதற்காக 2 எல்கேஜி குழந்தைகளின் வாயில் ‘செலோ டேப்டை’ ஒட்டிய ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குர்கிராமில் செயல்படும் நர்சரி பள்ளியில் எல்கேஜி நடத்தி வந்த ஆசிரியை ஒருவர், குழந்தைகள் அதிகமாக பேசியதற்காக கோபம் கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அறிவுறுத்தியும் குழந்தைகள் பேசுவதை நிறுத்தவில்லை.
இதையடுத்து 2 மாணவர்களின் வாயில் ‘செலோ டேப்பை’ ஒட்டியுள்ளார். அக்டோபர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூகவலைதளங்களில் பரவி வைரலானது. இதையடுத்து பள்ளி ஆசிரியையின் அத்துமீறல்கள் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வகுப்பறையை நடத்த முடியாத அளவு இரண்டு குழந்தைகளும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால் வாயில் செலோ டேப்பை ஒட்டியதாக அந்த ஆசிரியை விளக்கம் அளித்துள்ளார்.