

கேரள சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பினராயி விஜயனுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ரமேஷ் சென்னிதலாவுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
“கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படும் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு ராகுல் காந்தி தலைவர் இல்லை, அமித் ஷாதான் தலைவர்” என்று முதல்வர் பினராயி விஜயன் கடுமையாகப் பேசினார்.
கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா எழுந்து பேசினார். அவர் பேசுகையில், “மாநில ஆர்எஸ்எஸ் தலைவர் வல்சன் திலங்காரிக்கு அரசு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. அதனால்தான் அவர் கடந்த மாதம் சபரிமலையில் 18 படிகளில் சுதந்திரமாகச் சென்றார்” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் எழுந்து பதில் அளித்தார். அவர் பேசுகையில், “ பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. சட்டப்பேரவையின் வாயிலில் அமர்ந்து உங்கள் 3 எம்எல்ஏக்கள் தர்ணா செய்கிறார்கள். பாஜகவினர் தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்துகிறார்கள். உங்களுக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடைடேய உறவு இருப்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது.
அனைவரையும் எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியாது. இப்போது உங்களின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. நீங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருக்கமாக இருப்பது தெளிவாகிவிட்டது.
சபரிமலை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இருந்து காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. உங்களின் கட்சிக்கு தலைவர் ராகுல் காந்தி அல்ல அமித்ஷா தான்” எனத் தெரிவித்தார். இந்தப் பதிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் கைதட்டி ஆதரித்தனர்.
இதையடுத்து, ரமேஷ் சென்னிதலா பேசுகையில், “ நாங்கள் சபாநாயகருக்கு ஒத்துழைக்கிறோம். சபரிமலையில் அறிவிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை அரசு திரும்பப் பெற்றால், உண்ணாவிரதம் இருக்கும் எம்எல்ஏக்கள் போராட்டத்தை கைவிடுவது குறித்துப் பேசுவோம்” எனத் தெரிவித்தார்.
இதனால், காங்கிரஸ் கட்சி, ஆளும்கட்சி எம்எல்ஏக்களிடையே வாக்குவாதம் அதிகரித்தது. சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன்பு சென்று கோஷமிட்டனர்.
இதையடுத்து, பேசிய சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன், கேள்வி நேரம் என்பது விவாத நேரமாகிக் கொண்டிருக்கிறது என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்களை இருக்கையில் அமரக் கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து சபாநாயகர் முன் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டதால், அவையை 21 நிமிடங்கள் ஒத்திவைப்பதாகச் சபாநாயகர் அறிவித்தார்.
கடந்த வாரமும் இதேபோன்று சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டதால், அவை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சபரிமலையில் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் இல்லை எனக் கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.