Published : 06 Dec 2018 09:37 PM
Last Updated : 06 Dec 2018 09:37 PM

எச்ஐவி பாதித்த பெண் ஏரியில் குதித்து தற்கொலை: ஏரி நீரை பைப் போட்டு வெளியேற்றும் கிராமவாசிகள்

எச்.ஐ.வி. பாதித்த பெண் ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் ஏரி நீரை ராட்சத பைப்புகள் மூலம் கிராமவாசிகள் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

கர்நாடகா மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் மொரப் என்ற கிராமம் இருக்கிறது. கடந்த வாரம்  இந்த ஏரியில் இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

இதனால் அந்த ஏரி நீரை குடிக்க மக்கள் தயக்கம் காட்டினர். 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி நீரை அவர்கள் ராட்சத பைப் மூலம் வெளியேற்றி வருகின்றனர். மீண்டும் ஏரிக்கு மலப்பிரபா கால்வாய் மூலம் தண்ணீரை நிரப்பவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது கிராம பஞ்சாயத்து மற்றும் நாவல்குண்ட் தாலுகா நிர்வாக அனுமதியுடனேயே நடக்கிறது என்பதுதான் இன்னும் அதிர்ச்சித் தகவல்.

முதலில் அதிகாரிகள் கிராமவாசிகளை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். தண்ணீரை பரிசோதனை செய்வோம் என்று கூறியுள்ளனர். ஆனால், இதற்கு கிராமவாசிகள் சற்றும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், வேறு வழியே இன்றி 4 மோட்டார்கள் 20 ராட்சத் ட்யூப் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இது குறித்து ஹூப்ளி - தார்வாத் நகர முனிசிபல் கார்பரேஷன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரபு பிராடர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடன் பேசும்போது, "எச்ஐவி பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் ஏரியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதால் கிராமவாசிகள் ஏரி நீரை பயன்படுத்த தயங்குகின்றனர். இது முற்றிலும் அறிவியலுக்கு புறம்பானது. எச்ஐவி கிருமி தண்ணீர் வழியாக பரவாது என்பதே உண்மை" என்றார்.

வடக்கு கர்நாடகாவில் நாவல்குண்ட் தாலுகாவில் உள்ள மோரப் ஏரிதான் மிகப் பெரிய ஏரி. அதுமட்டுமல்லாமல் இதுதான் ஒரே குடிநீர் ஆதாரமும்கூட. சம்பவத்துக்கு பிறகு கிராமவாசிகள் மலபிரபா கால்வாய்க்கு 3 கிலோமீட்டர் பயணித்துச் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

கிராம பஞ்சாயத்து உறுப்பினர் லக்‌ஷமன் பட்டீல் கூறும்போது, "இன்னும் ஏரியில் இருந்து 60% தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதற்கு 5 நாட்களாவது ஆகும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x