

விவசாயிகளுக்குப் பயிர் கடன் தள்ளுபடி வழங்கக்கோரி குஜராத், அசாம் முதல்வர்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்பவதோடு மட்டுமல்லாமல், பிரதமர் மோடியையும் கூட எழுப்புவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவந்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற கமல்நாத்தும், சத்தீஸ்கர் மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற பூபேந்திர பாகேலும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார். இது குறித்து கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ நாட்டில் விவசாயிகளின் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யாமல் பெரும்தொழிலதிபர்களுக்கு மத்தியஅரசு தள்ளுபடி அளிக்கிறது. விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும்வரை மோடியை தூங்கவிடமாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் வேளாண் கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்துவோம் என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ அசாம், குஜராத் முதல்வர்களும் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி வழங்காமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்கள். பிரதமர் மோடியும் தூக்கத்தில் இருக்கிறார். அவர்கள் அனைவரையும் நாங்கள் தூக்கத்தில் இருந்து எழுப்பி விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி வழங்க வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு நாடுமுழுவதும் விவசாயிகளுக்குப் பயிர் கடன் தள்ளுபடியை மத்திய அரசுஅளிக்க திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன
ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை கர்நாடக, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மக்களிடம் அளித்த வாக்குறுதியின்படி, வேளாண்பயிர் கடன் தள்ளுபடியை வழங்கியது. சத்தீஸ்கரிலும், மத்தியப்பிரதேசத்திலும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.