Last Updated : 16 Dec, 2018 03:00 PM

 

Published : 16 Dec 2018 03:00 PM
Last Updated : 16 Dec 2018 03:00 PM

சபரிமலையில் தரிசனம் செய்ய திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு: திருப்பி அனுப்பிய போலீஸாரால் சர்ச்சை

கேரள மாநிலத்தில் உள்ள, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த திருநங்கைகள் 4 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துக் கடந்த செப்டம்பர் மாதம் 28-ம்தேதி தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடந்து வருகிறது, இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டுள்ளது. அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சபரிமலையில் போலீஸார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு 144-தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.

போலீஸாரின் பல்வேறு கெடுபிடிகளால், மகரவிளக்கு சீசன் தொடங்கியும் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது, கடந்த சில நாட்களாக மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இருப்பினும், 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சபரிமலைக்குள் நுழைவதற்குப் பக்தர்கள், போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோட்டயம், மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கச் சென்றனர். அவர்கள் எரிமேலி வழியாகப் பம்பைக்கு இன்று அதிகாலை 1.30 மணிக்குச் செல்ல முயன்றனர்.

அப்போது, போலீஸார் அவர்கள் 4 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்களின் பெயர் அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சு ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தாங்கள் முறைப்படி விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ளோம் என்று திருநங்கைகள் போலீஸாரிடம் தெரிவித்தனர். ஆனால் திருநங்கைகளை சபரிமலை கோயிலுக்கு அனுமதித்து அங்கிருக்கும் சிலர் இவர்களை மறித்து போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்று கருதினார்கள்.

இதையடுத்து, திருநங்கைகள் 4 பேரும் சபரிமலை செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருநங்கைகள் ஏன் சபரிமலைக்கு செல்லக்கூடாது, உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதே என் கேள்வி எழுப்பியதற்குச் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் எனக் கூறி அவர்களைப் பாதுகாப்புடன் எரிமேலிக்கு அனுப்பி வைத்தனர்.

திருநங்கைகளில் ஒருவரான அனன்யா நிருபர்களிடம் கூறுகையில், “ நாங்கள் சபரிமலை கோயிலுக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இது குறித்து நாங்கள் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு  பாதுகாப்புடன் சபரிமலை செல்லக் கோரிக்கை விடுப்போம்.

நாங்கள் அனைத்து முறைப்படி விரதம் இருந்து, இருமுடியுடன் சபரிமலைக்குச் வந்தோம். ஆனால், எருமேலியில் இருந்த போலீஸார் எங்களின் தகாத முறையில் பேசி, எங்களைப் பம்பைக்கு செல்ல அனுமதி மறுத்தனர்.

முதலில் நாங்கள் பெண் உடையில் இருப்பதால், கோயிலுக்கு அனுமதிக்க முடியாது என்றனர், அதன்பின் ஆண்கள் உடையில் பேண்ட், சட்டை அணிந்தபின்பு வாருங்கள் என்றனர் நாங்கள் என்ன ஆண்களா? என்று ” அவர் கேள்வி எழுப்பினார்.

எருமேலியில் போலீஸாருடன் திருநங்கைகள் 4 பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் பெண் போலீஸார் சமாதானப்படுத்தி, திருநங்கைகளைப் பாதுகாப்புடன் கோட்டயம் அனுப்பி வைத்தனர்.

திருநங்கைகள் வேதனையுடன் பேசி வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x