

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷெஹரில் நடந்த கலவரத்தில் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக ராணுவ வீரர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புலந்த்ஷெஹரின் சயானா கிராமத்தில் பசுவதையைக் கண்டித்து கடந்த வாரம் நடந்த கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தேவேந்திரா, சமன் சிங், ஆஷிஷ் சவுகான் மற்றும் சதீஷ் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் கலவரத்துக்குக் காரணமான முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் பஜ்ரங் தளத்தின் மாவட்ட அமைப்பாளர் யோகேஷ் ராஜ் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கலவரம் தொடர்பான வீடியோவை போலீஸார் ஆய்வு செய்ததில், ராணுவ வீரர் ஜிதேந்திர மாலிக் என்பவர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. ஜிதேந்திர மாலிக்கை அப்பகுதியில் ஜீது பாஜி என்றும் அழைக்கின்றனர்.
காஷ்மீரில் 22 ராஷ்ட்ரிய ரைபிள் பட்டாலியன் பிரிவில் ஜவானாக இருக்கும் ஜிதேந்திர மாலிக், 15 நாட்கள் விடுமுறையில் புலந்த்ஷெஹர் நகருக்கு வந்துள்ளார். அங்கு பசு வதை தொடர்பாக நடந்த கலவரத்தில் பங்கேற்று துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், 'தி இந்து'விடம்(ஆங்கிலம்) போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையிர், “ காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் ராணுவ வீரர் ஜிதேந்திர மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் சிறீநகர் அழைத்து வரப்பட்டு, உத்தரப் பிரதேச மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் “ எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இந்தக் கலவரம் தொடர்பாக புலந்த்ஷெஹர் போலீஸ் கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணபகதூர் சிங் உள்பட இரு போலீஸ் அதிகாரிகளை உ.பி. மாநில உள்துறை செயலாளர் அரவிந்த் குமார் இடமாற்றம் செய்துள்ளார்.
மேலும், புலந்த்ஷெஹர் கலவரத்தின்போது, கலவரச் சூழலை போலீஸார் எவ்வாறு கையாண்டனர் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய புலனாய்வுத்துறை கூடுதல் டிஜிபி எஸ்.பி. சிரத்கருக்கு உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.