வறுமையை ஒழிக்க இந்தியா பாடுபடவேண்டும்: ஐ.நா. உணவுக் கழகம்

வறுமையை ஒழிக்க இந்தியா பாடுபடவேண்டும்: ஐ.நா. உணவுக் கழகம்
Updated on
1 min read

கோதுமை, மற்றும் நெல் உற்பத்தியில் உலகில் 2ஆம் இடம் வகிக்கும் இந்தியா வறுமையை ஒழிப்பதில் கூடுதல் முனைப்புக் காட்டுவது அவசியம் என்று ஐ.நா. உணவுக் கழகமான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

125 கோடி மக்கள்தொகையில் சுமார் 17% மக்களுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பதில்லை. 2015ஆம் ஆண்டு உலகின் வறுமையில் வாடும் மக்கள் எண்ணிக்கையை இப்போது இருக்கும் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க ஐ.நா. திட்டங்களைப் பரிந்துரை செய்து வருகிறது.

இது குறித்து உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குநர் ஜோஸ் கிரேசியானோ டா சில்வா கூறும் போது, “இந்த விவகாரத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிலைமைகள் உள்ளன. வறுமை ஒழிப்பில் சில நாடுகள் அதிக முனைப்பு காட்டுகின்றன. இதில் முன்னேற்றம் காண நாங்கள் வலியுறுத்த விரும்பும் நாடுகளில் இந்தியா பிரதானமாக உள்ளது.

இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 2013-14ஆம் ஆண்டில் 264.77 மில்லியன் டன்கள். ஆனால் வறுமையை ஒழிப்பதில் இதன் பங்கு கணிசமாக இல்லை.

இந்தியாவிலும் ஆசியாவின் பிற நாடுகளிலும் வறுமையை ஒழிக்க போதிய நடவடிக்கைகள் இன்னும் தேவைப்படுகிறது. ஆட்சியாளர்கள் இதில் முனைப்பு அதிகம் காட்டுவது முக்கியம்.

உலகில் பசியால் வாடுபவர்களில் பாதி மக்கள் ஆசிய நாடுகளிலேயே உள்ளனர். வறுமையால் வாடும் மக்கள்தொகை பற்றிய நாடுவாரியான விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

உணவு உற்பத்தியைப் பெருக்குவது மட்டும் போதாது, பெரும்பான்மையோர் வேலைவாய்ப்பின்றி, காசு பணமின்றி உணவுப்பொருள் பக்கம் அண்டவே முடிவதில்லை என்பதே உண்மை.

வெறும் உணவுப்பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதற்கு உதவாது, சிவில் சமூகங்கள் மற்றும் தனியார் துறைகளின் பங்கேற்பு வறுமை ஒழிப்புக்கு மிக அவசியமானது.

பிரேசிலில் வறுமை ஒழிப்புத் திட்டத்தில் 18 அமைச்சகங்கள் ஈடுபட்டுள்ளன. அத்தகைய பங்கேற்பு அவசியம்” என்று கூறினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோஸ் கிரேசியானோ டா சில்வா, பிரேசிலில் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்காகச் செய்த அளப்பரிய பங்களிப்புக்காக கவுரவிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in