

6 மாதகால கவர்னர் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் டிசம்பர் 19 நள்ளிரவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வருகிறது என்று அதிகாரபூர்வ உத்தரவு அறிவித்துள்ளது.
மெஹ்பூபா முப்தி அரசுக்கான தன் ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதையடுத்து ஜூன் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் அரசியல் நெருக்கடிக்குள் வீழ்ந்தது. இதனையடுத்து மத்திய ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை அளித்ததையடுத்து டிசம்பர் 17-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமை மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது.
ஜம்முகாஷ்மீருக்கு தனியான அரசியல் சட்டம் என்பதால் சட்டப்பிரிவு 92-ன் கீழ் 6 மாதகால கவர்னர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது. ஜம்முகாஷ்மீரைப் பொறுத்தவரை இது கட்டாயமான சட்டவிதியாகும். இதில் அதிகாரம் முழுதும் கவர்னருக்கு மட்டுமே.
இதற்கிடையே பிடிபி கட்சி காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமைகோரியதையடுத்து நவம்பர் 21ம் தேதி கவர்னர் 87 உறுப்பினர் மாநில சட்டப்பேரவையைக் கலைத்தார்.
இதே வேளையில் மக்கள் மாநாட்டுக் கட்சியின் சஜத் லோனி, பாஜக உறுப்பினர்கள் 25 பேர் மற்றும் தெரியாத மற்ற 18 பேர்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதனையடுத்து குதிரைபேரம் மற்றும் ஸ்திரமற்ற நிலையைக் காரணம் காட்டி சட்டமன்றத்தைக் கலைத்தார்.